முன்விரோதத் தகராறில் மூவரை கத்தியால் குத்திய இருவர் கைது
மதுரையில் முன்விரோதத் தகராறில் மூவரைக் கத்தியால் குத்திய இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரையில் முன்விரோதத் தகராறில் மூவரைக் கத்தியால் குத்திய இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரை பாலம் ஸ்டேஷன் சாலை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). இவருக்கும் பந்தல்குடி 5-ஆவது தெருவைச் சேர்ந்த செல்வபாண்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், அம்பேத்கர் நகரில் சுரேஷ் தனது நண்பர்களான முத்துப்பாண்டி, பழனிவேல் ஆகியோருடன் சனிக்கிழமை பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த செல்வபாண்டி, ரமேஷ் ஆகியோர் சுரேஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருவரும் கத்தியால் சுரேஷ் குத்தியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற முத்துப்பாண்டி, பழனிவேல் ஆகியோரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக சுரேஷ் அளித்த புகாரின்பேரில் செல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த செல்வபாண்டி, ஜம்புரோபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.