முகப்பு
மதுரை

ஆலய நுழைவுப் போராட்ட 79-ஆம் ஆண்டு நிறைவு: சேவாலயம் விடுதி மாணவர்கள் மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம்

மதுரையில் சமூக சீர்திருத்தவாதி வைத்தியநாதய்யர் நடத்திய ஆலயப் பிரவேசத்தின் 79-ஆவது ஆண்டு நிறைவையொட்டி சேவாலயம்

Updated On : 9 ஜூலை, 2018 at 7:10 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

மதுரையில் சமூக சீர்திருத்தவாதி வைத்தியநாதய்யர் நடத்திய ஆலயப் பிரவேசத்தின் 79-ஆவது ஆண்டு நிறைவையொட்டி சேவாலயம் விடுதி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக சென்று  மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன்கோயிலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உள்ளே நுழையக்கூடாது என்ற பாகுபாடு இருந்தது. இதை எதிர்த்து 1939-ம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி இரவு சமூக சீர்திருத்தவாதி வைத்தியநாதய்யர் மீனாட்சி அம்மன் கோயிலின் தெற்கு நுழைவு வாயில் வழியாக தாழ்த்தப்பட்டோர் அனைவரையும் அழைத்துக்கொண்டு  கருவறை வரை சென்றார். மதுரைக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த தமிழகத்திற்கே முன் மாதிரியாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் 79-ஆம் ஆண்டு நினைவு நாள் ஜூலை 8.
ஆலயப் பிரவேச தினத்தையொட்டி செனாய் நகரில் 
உள்ள சேவாலயம் மாணவர்கள்  வைத்தியநாதய்யர் படத்துடன்  ஊர்வலமாகச் சென்று மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். 
இதனைத்தொடர்ந்து மாலையில் செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர்கள் விடுதியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சேவாலய நிர்வாகி கனகவேல் பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.தியாகி வைத்தியநாதய்யருக்கு நினைவில்லம் அமைப்பதுடன், அவரது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறியது: 
வைத்தியநாதய்யர் தன்னுடைய பெரும்பாலான சொத்துக்களை தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகவே பயன்படுத்தினார். அதன் ஒரு பகுதிதான் செனாய்நகரில் அமைந்துள்ள சேவாலயம் மாணவர்கள் விடுதி. 
இங்கு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் தங்கிப்படித்து தங்கள் கல்வியறிவை மேம்படுத்தி வருகின்றனர். தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காக போராடிய வைத்தியநாதய்யருக்கு மதுரை காக்காத்தோப்பு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நினைவில்லம் அமைக்க வேண்டும். அவரது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.