கல்வி உதவிக் கோரி, ஆட்சியரிடம் பள்ளி மாணவி மனு
தாய் இறந்துவிட்டதாலும், தந்தை சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், தனக்கு கல்வி உதவி வழங்கக் கோரி பள்ளி மாணவி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.
தாய் இறந்துவிட்டதாலும், தந்தை சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், தனக்கு கல்வி உதவி வழங்கக் கோரி பள்ளி மாணவி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.
மதுரை கிழக்கு வட்டம், இலக்கியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சா.ஆரம்மாள் (13). இவரது தாய் பந்தானம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது தந்தை சாவுடுதாயன், கூலி வேலை பார்த்து ஆரம்மாளின் படிப்புக்கு உதவி வந்தார். இந்நிலையில், அவரும் தற்போது சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளார். உறவினர்களிடமும் உதவி கிடைக்காத நிலையில், ஆரம்மாளின் குடும்ப சூழலை அறிந்த சிலர் மதுரை சொக்கிக்குளம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கடந்த 2016-இல் சேர்த்துள்ளனர். இப் பள்ளி விடுதியிலேயே தங்கி, தற்போது 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். மிகவும் கஷ்டமான சூழலில் பலரிடமும் உதவி பெற்று கல்விக் கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், தந்தையின் சிகிச்சைக்கு உதவி செய்யவும், தனது கல்விச் செலவுக்கு அரசு உதவ வேண்டும் எனக் கோரியும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.
இதுகுறித்து மாணவி ஆரம்மாள் கூறியது: நான் 6-ஆம் வகுப்பு படிக்கும்போது எனது தாயார் இறந்துவிட்டார். அப்பா தான் என்னை கவனித்து வந்தார். அவருக்கும் உடல்நிலை சரியில்லை. படித்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது எனது தந்தையின் கனவு. அதை நனவாக்குவதற்காக நன்றாகப் படித்து வருகிறேன். எனது கல்விச் செலவுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.