குவாரி தண்ணீரில் மூழ்கி பாட்டி, பேரன் சாவு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை பாட்டியும், அவரது பேரனும் குவாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை பாட்டியும், அவரது பேரனும் குவாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருமங்கலத்தை அடுத்த சின்ன உலகாணி கிராமத்தைச் சேர்ந்த சோணைமுத்து மனைவி போதுமணி(48). இவர்களுடைய மகள் சுதா. திருமணமாகி வெளியூரில் வசித்துவரும் இவர் கடந்த இரு தினங்களுக்கு முன், தனது மகன் பெரியசாமியுடன் (2) சின்ன உலகாணி வந்துள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, போதுமணி தனது பேரன் பெரியசாமியுடன் அப்பகுதியில் இருந்த கல்குவாரியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் துணி துவைக்கச் சென்றாராம். அப்போது பேரன் பெரியசாமி தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற தண்ணீரில் இறங்கிய போதுமணியும் தண்ணீரில் மூழ்கினார்.
இதில் இருவரும் உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற கூடக்கோயில் போலீஸார் இருவரது சடலங்களையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.