முகப்பு
மதுரை

மருத்துவர்கள் மாற்று மருத்துவ முறைகளை அறிந்து கொள்ள வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி

அலோபதி மருத்துவர்கள் மாற்று மருத்துவ முறைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா பேசினார்.

Updated On : 29 மார்ச், 2018 at 8:14 AM
பகிர்:

அலோபதி மருத்துவர்கள் மாற்று மருத்துவ முறைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா பேசினார்.
  மதுரை மருத்துவக் கல்லூரியில் 2012-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மருத்துவக் கல்லூரி கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு டீன். டி. மருதுபாண்டியன் தலைமை வகித்தார். இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். விமலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்த்திய பட்டமளிப்பு உரை :
  மருத்துவ படிப்பு முடிந்து சமூகத்துக்குள் நுழையும் மாணவ, மாணவியர் இந்த நிலைக்கு தங்களை உயர்த்திய பெற்றோரை எண்ணிப் பார்க்க வேண்டும். தற்போது சமூகத்தில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை கைவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் பிள்ளைகளிடம் பெற்றோர் ஜீவனாம்சம் கோரும் வழக்குகள் நீதிமன்றத்தில் அதிகரித்து வருகின்றன.   
  குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு வழக்குகளில் மருத்துவ ஆவணங்கள் மிக முக்கியமானவை. வன்கொடுமைக்கு ஆளான குழந்தையின் வயது, பிறப்புறுப்பில் ஏற்பட்டிருக்கும் காயம் ஆகியவை தொடர்பாக மருத்துவர்கள் பதிவு செய்வதோடு, தொடர்ந்து 6 மாதங்களுக்கு குழந்தையின் மன நலம், உளவியல் பாதிப்பு தொடர்பாகவும் ஆய்வு செய்து, ஆற்றுப்படுத்துதல் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்க வேண்டும். 
தற்போது மருத்துவத் துறையில் நவீன கருவிகள் மூலம் கண்டுபிடிக்கப்படும் பல்வேறு விஷயங்களை நமது சித்தர்கள் ஏற்கெனவே கணித்து கூறியுள்ளனர். சித்தர்களையும், தமிழ் இலக்கியங்களையும் மருத்துவ மாணவர்கள் அறிய முற்படுதல் மிகவும் அவசியம். உடலின் அமைப்பு, அது இயங்கும் விதம் குறித்து சித்தர்கள் பாடல்களாக எழுதி வைத்துள்ளனர். நாடித் துடிப்பைக் கொண்டே நோயின் தன்மையை அறிந்தவர்கள் சித்தர்கள். ஆகையால் மாற்று மருத்துவம் குறித்தும் அலோபதி மருத்துவர்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.
   மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின்ஜோ, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் செந்தில் ஆகியோரும் உரையாற்றினர். நிகழ்ச்சியில், 2012-2018-ம் ஆண்டில் பயின்ற மருத்துவ மாணவர்கள் 149 பேருக்கு நீதிபதி விமலா பட்டங்களும், சிறப்பாக செயல்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு பதக்கங்களையும் வழங்கிப் பாராட்டினார்.  மருத்துவ கண்காணிப்பாளர் ஷீலா மல்லிகாராணி, துணை முதல்வர் தனலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் சங்குமணி வரவேற்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.