தமிழகத்தின் நலன்களை மத்திய பாஜக அரசு புறக்கணிக்கிறது: வைகோ குற்றச்சாட்டு
மத்திய பாஜக அரசு தமிழகத்தின் நலன்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றஞ்சாட்டினார்.
மத்திய பாஜக அரசு தமிழகத்தின் நலன்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றஞ்சாட்டினார்.
மதுரை கே.கே.நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கை அரசு கொண்டு வந்துள்ள கடல் தொழில் பாதுகாப்புச் சட்டம், தமிழக மீனவர்களின் வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களுக்கு ரூ.60 லட்சம் அபராதம், 3 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பேரிடி ஏற்பட்டதைப் போல உள்ளது.
இலங்கை அரசால் கடல் தொழில் பாதுகாப்புச் சட்ட மசோதா கொண்டு வரும் போதே, இந்த மசோதா சட்டமாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினேன். இருப்பினும் அதற்கான எந்த முயற்சியையும் மத்திய பாஜக அரசு மேற்கொள்ளவில்லை. தமிழக மீனவர்களை மத்திய அரசு இந்திய குடிமக்களாகவே கருதவில்லை.
காவிரி டெல்டா மாவட்டங்களின் வேளாண்மையைப் பாழாக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எதிராகப் பொதுமக்கள் போராடி வருகின்றனர். இச்சூழலில் தூத்துக்குடி மாவட்டத்தை நாசமாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழுமத்துக்கு, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக மக்களை இந்திய குடிமக்களாகவே கருதவில்லை என்பதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது. பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களின் எரிபொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டிருப்பதாக அக் கட்சி கூறி வருகிறது. இவ்விஷயத்தில் பாஜக அரசு நாடகமாடி வருகிறது. அதோடு, சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர மத்திய அரசு மறுக்கிறது. தமிழக உரிமைகள் பறிக்கும் போது, அதைக் காப்பாற்றுவதைப் பற்றிய அக்கறை தமிழக அரசுக்கு இல்லை.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமூகத்தினர் குறித்து தவறான கருத்துக்கள் இடம் பெற்றதையடுத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதையடுத்து அதில் சில பகுதிகள் மட்டுமே நீக்கப்பட்டிருக்கிறது. அந்த பாடத்தை முழுமையாக நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை, விடுதலை செய்வது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழக ஆளுநர் தாமதம் செய்து வருகிறார். கடந்த 27 ஆண்டுகளாக கொடுமையை அனுபவித்து வருபவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.