மதுரை

"மத்திய, மாநில அரசுகள் நீர் மேலாண்மைக்கு  முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'

DIN

மத்திய, மாநில அரசுகள் நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணிராமதாஸ் தெரிவித்தார்.   
சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:  மழை வெள்ளத்தால் கேரளாவில் 80 பேரும், கர்நாடகத்தில் 30 முதல் 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றத்தில் இருந்து தற்போது காலநிலை அவசரத்திற்கு சென்றுள்ளது. 
 உலக நாடுகள் காலநிலை அவசரத்தை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டிருக்கின்றன.  பெரும் வெள்ளம்,  கடும் வறட்சி போன்றவை வரும் காலங்களில் மாறிமாறி வர உள்ளது.  மத்திய, மாநில அரசுகள் அதற்கேற்ப சூழலைப் புரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 இனிவரும் காலங்களில் வெள்ளத்தால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   
கர்நாடக அணைகளில் தண்ணீர் நிரம்பிய பிறகு உபரி நீரைத்தான் தமிழகத்திற்கு கொடுக்கின்றனர். தற்போது ஒரே நாளில் இரண்டரை லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால்  இரண்டு நாள்களில்  மேட்டூர் அணை நிரம்பிவிடும் சூழல் உள்ளது. அதன்பின்பு வரும் தண்ணீர் எல்லாம் கடலில் கலக்கிற  நிலை ஏற்படும். கடந்த ஆண்டு 130 முதல் 140 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. கர்நாடகம் நமக்கு தரவேண்டிய 172 டிஎம்சி தண்ணீரை ஒரு வார காலத்திற்குள் தந்து விடுவார்கள். ஆனால் நமக்கு தேக்கி வைக்க தடுப்பணைகள் இல்லை. தடுப்பணைகளை அதிகம் ஏற்படுத்த வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகம், தமிழக காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளையும் கட்டுப்பாட்டில் வைத்து, மழைகாலத்திற்கு முன்பே கர்நாடகத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றி இருக்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து இன்னும் புதிய அணைகள் மற்றும் தடுப்பணைகள் அதிகம் கட்ட வேண்டும். காவிரியாற்றில் ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். 
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க அப்பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்து சட்ட வடிவம் கொண்டுவர வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் வராது. விவசாயம் பாதுகாக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT