மதுரை

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது குறித்து மதுரை மக்களுக்கே கவலை இல்லை: உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

DIN

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது குறித்து மதுரை மக்களுக்கே கவலை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "வருசநாட்டு மலைப் பகுதியில் உருவாகும் வைகை ஆற்றோடு தேனி மாவட்டத்தில் சுருளியாறு, முல்லையாறு, வராக நதி, மஞ்சளாறு ஆகிய ஆறுகளும், மதுரை மாவட்டத்தில் கிருதுமால் நதியும் இணைகின்றன. 
பெரியார் அணையிலிருந்து பெருமளவு தண்ணீர் வைகை ஆற்றுக்கு கிடைக்கும் நிலையில், கோடை காலங்களில் வைகை ஆற்றின் நீர், மதுரையை வந்தடைவதில்லை. அரசின் பராமரிப்பு குறைவால் வைகை ஆறு பயன்படுத்த இயலாத அளவு மாசடைந்து காணப்படுகிறது. 
வைகை ஆற்று நீர் தேனி, திண்டுக்கல்,  மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வரை பாய்ந்து 
தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து வந்தது. சுமார்  258  கி.மீ., பயணித்து ராமநாதபுரத்தை அடையும் இந்த ஆற்றில் 452-க்கும் அதிகமான பகுதிகளில் கழிவுநீர் கலக்கிறது. 
மதுரை மாநகராட்சி சார்பில், ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கப்பட்டதால், ஆறு போதிய அகலமின்றி சுருங்கி உள்ளது. அதோடு வைகை ஆற்றுப் பகுதியை ஆக்கிரமித்து பல்வேறு கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. வைகை ஆற்றை தூய்மைப்படுத்தி பாதுகாக்கவும், மாசுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை. இதனால் ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதுடன் அதிகளவில் குப்பைகளும்,  கழிவு நீரும் கலக்கின்றன.
இந்நிலையில் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் மதுரை வைகை ஆற்றில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ஆற்றினுள் சாலை அமைத்தால் அகலம் சுருங்கி காலப்போக்கில் ஆற்றின் வழிதடம் மறைந்துவிடும். எனவே, சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ், மதுரை வைகை ஆற்றில் சாலை அமைக்கக் கூடாது என உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், "வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது குறித்து மதுரை மக்களுக்கே கவலை இல்லாதபோது மற்றவர்களுக்கு எப்படி அக்கறை இருக்கும்?' என வேதனை தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்கள், வைகை ஆற்றில் எத்தனை இடங்களில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகிறது? இவற்றை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? வைகை ஆற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏதேனும் உள்ளதா? கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த முடியுமா? வைகை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? போன்றவை தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT