ஜெயலலிதா பிறந்த நாள்: பொதுமக்களுக்கு அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் மற்றும் பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருப்பரங்குன்றம் நகர் பகுதியில் கொடியேற்று விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட செயலர் எம்.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன், பகுதி செயலர் பன்னீர் செல்வம், வட்ட செயலர்கள் பொன்.முருகன், பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆஸ்டின்பட்டி ஆதரவற்றோர் இல்லம், திருப்பரங்குன்றம் கோயில் ஆகிய இடங்களில் முன்னாள் ஜெ. பேரவை செயலர் எம்.ஜி.பாரி தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் எம்.ஜி.ஆர் மன்றச் செயலர் ஓம்.கே.சந்திரன், முன்னாள் ஒன்றியச் செயலர் சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருமங்கலம் நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஜெ. பேரவை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை ஜெ பேரவை மாநில செயலரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார்தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர செயலர் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து திருமங்கலத்தில் உள்ள பாய்ஸ்டவுன், கேள்ஸ் டவுன் ஆகிய காப்பகங்களில் குழந்தைகளுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
மேலூர்: மேலூர் செக்கடி பஜாரில் ஞாயிற்றுக்கிழமை ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அதிமுகவினர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமானோருக்கு இனிப்புகள் வழங்கினர். இதற்கு மேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்எல்ஏ க.தமிழரசன், மேலூர் ஒன்றியச் செயலர் பொன்னுச்சாமி, மதுரை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் பெரியசாமி, கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலர் வெற்றிச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து மேலூரிலுள்ள சிஎஸ்ஐ மாற்றுத் திறனாளிகள் விடுதியிலும், சோலைமலை முருகன் கோயிலிலும் அன்னதானம் நடைபெற்றது. மேலூர் அரசு மருத்துவமனையிலுள்ள ரத்த சேமிப்பு நிலையத்துக்கு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள குளிர்சாதனப் பெட்டியை பெரியபுள்ளான் வழங்கினார். மேலும் அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, பரிசுப் பொருள்களை அவர் வழங்கினர்.
மேலூர் நகர் அதிமுக சார்பில் எஸ்.ஏ.ஏ. பாஸ்கரன் தலைமையில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏராளமானோருக்கு இனிப்புகள் வழங்கினர்.
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் அதிமுக சார்பில் பொது மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பொதுச்செயலர் பசும்பொன்பாண்டியன் தலைமை வகித்தார். பொருளாளர் அய்யன்அருள், துணை பொதுச் செயலர் முத்துக்குமார், தேனி மாவட்ட செயலர் வண்டியூர் காசி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறிஞ்சி நகர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், அப்பகுதி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பொதுச் செயலர் பசும்பொன்பாண்டியன் வழங்கினார். முன்னதாக அவைத் தலைவர் தாஜ்தி அனைவரையும் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலர் மன்னாதிமன்னன் நன்றி கூறினார்.
உசிலம்பட்டியில் சட்டப் பேரவை உறுப்பினர் பா.நீதிபதி தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் நகரச் செயலர் கே.ஆர்.பூமாராஜா, செல்லம்பட்டி ஒன்றியச் செயலர் ராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், செல்லம்பட்டி முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் பெருமாள், எம்.ஜி.ஆர், மன்ற நிர்வாகி பரமன், ஜெ. பேரவை செயலர் வழக்குரைஞர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அமமுக சார்பில் உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பாக, மாவட்ட செயலர் மகேந்திரன் தலைமையில் நகரச் செயலர் குணசேகரபாண்டியன் முன்னிலையில் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.