கிடப்பில் போடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மையப் பணி!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 2016-இல் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு கிடப்பில்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 2016-இல் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ள ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மையத்தின் கட்டுமானப் பணி எப்போது தொடங்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த புதிய அறுவைச் சிகிச்சை மையம் கட்ட 2016 ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, கட்டுமானப் பணிக்கு ரூ.150 கோடி, உபகரணங்களுக்கு ரூ.175 கோடி ஒதுக்கப்படும். இந்த ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மையம், 7 தளங்களாக கட்டப்பட்டு, அங்கு நவீன வசதிகளுடன் 26 அறுவைச் சிகிச்சை அரங்குகள், 600 பேர் அமரும் வசதியுடைய அரங்கு, அதிநவீன கிருமி நீக்கி அறை, மயக்கவியல் துறை, சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன், கார் நிறுத்தும் இடம் மற்றும் அதிநவீன சலவையகம் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மையத்துக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் இடம் தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இந்த மையத்துக்கு குறிப்பிடும் அளவுக்குத் தேவையான இடம் கிடைக்காமல் இடம் தேர்வு செய்வது மிகப்பெரிய சவலாக மாறியது. ஒரு கட்டத்தில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலையரங்கம், 1, 2 மற்றும் 3 அறுவைச் சிகிச்சை அரங்குகள் மற்றும் சலவைக் கூடம் அமைந்துள்ள கட்டடங்களை இடிக்க முடிவு செய்து, இந்த கட்டடங்களை இடிக்கும் பணியை 3 மாதத்துக்குள் முடித்து, புதிய கட்டுமானப் பணியை தொடங்கி, 24 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், தேர்வு செய்யப்பட்ட ஜப்பானிய நிதி நிறுவனம் 2018 ஆகஸ்டில் முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டது. அப்போது, அறுவைச் சிகிச்சை மையத்துக்கு என வடிவமைக்கப்பட்ட சாலை வசதி, தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு போதுமானதாக இல்லை என தெரிவித்தது. இதையடுத்து, மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயில் உள்ள மருத்துவர்கள் கார் நிறுத்துமிடம், கண் மருத்துவப்பிரிவு, மருந்து வார்டு பகுதிகளை இடித்துவிட்டு கட்டடம் கட்ட மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்கிடையில், இக்கட்டடங்கள் 170 ஆண்டுகள் பழைமையான கல் கட்டடம் ஆகும். தொடக்கக் காலத்தில் இருந்தே கட்டடங்கள் உறுதித்தன்மையுடன் உள்ளன. எனவே, இக்கட்டடங்களை இடிக்கக் கூடாது என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பழங்கால கட்டடங்களை இடிக்கும் முடிவு கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆய்வாளர்களை கொண்டு கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் பின்னர், பழையக் கட்டடங்களை இடித்துவிட்டு மருத்துவமனையின் முன் பகுதியில் கட்டடம் கட்ட கடந்த ஜனவரியில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மையத்தின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஆவணங்கள் தயார் செய்யும் வேலைதான் மீதம் உள்ளது என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் 5 மாதங்கள் கடந்த பிறகும் ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் தான் நடைபெற்று வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் அறிவிக்கப்பட்ட சென்னை கீழ்பாக்கம் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் அமையவுள்ள அறுவைச் சிகிச்சை மையங்களின் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. மதுரையில் மட்டும் ஏனோ பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. எனவே, தமிழக அரசும், மருத்துவத் துறையும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மையம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
இதுகுறித்து, மருத்துவமனை முதன்மையர் கே. வனிதா கூறியது: இடம் தேர்வு செய்யும் பிரச்னைகள் முடிந்து விட்டது. அண்மையில் மக்களவை தேர்தல் நடைபெற்றதால் ஒரு மாதத்துக்கு மேல் எந்த பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை. இதனிடையே ஜப்பானிய நிதி நிறுவனம் சார்பில் எய்ம்ஸ் ஆய்வு பணி வேறு நடைபெற்றது.
இதனால் ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சைப் மையத்தின் ஆவணம் தயார் செய்யும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது ஆவணங்கள் தயார் செய்யும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால், அந்த பணிகள் நிறைவடைந்தவுடன் பழைய கட்டடங்களை இடிக்கும் பணிகள் தொடங்கப்படும். தொடர்ந்து புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றார்.