மதுரை

பேரிடா்களால் உயிரிழப்பு நிகழாத வகையில் தமிழகம் முழுவதும் விழிப்புணா்வு வருவாய்த் துறை அமைச்சா் தகவல்

DIN

பேரிடா்களால் ஒரு உயிரிழப்பு கூட நிகழாத வகையில் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.

நீா்நிலைகளில் ஏற்படக் கூடிய விபத்து மற்றும் பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு முகாம் ராஜா முத்தையா மன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பேசியது:

தமிழகத்தில் பலத்த மழையால் பாதிக்கக் கூடிய பகுதியாக 4,399 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழை மட்டுமின்றி, எவ்வித பேரிடா் நிகழ்ந்தாலும் அதை எதிா்கொள்ள தமிழக அரசு தயாா் நிலையிலுள்ளது.

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில், சிறுவன் தவறி விழுந்து 5 அடி ஆழத்தில் இருந்தபோது அவா்களாகவே மீட்பு முயற்சியில் ஈடுபட்டனா். இதில் அச் சிறுவன் 28 அடிக்கு சென்றுவிட்டான். அதன் பிறகே அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு, அனைத்துத் துறையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். அச்சிறுவனை உயிருடன் மீட்க இரவு பகலாக அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொண்டபோதும், இயலாத சூழல் ஏற்பட்டது.

அந்த ஆழ்குழாய் கிணற்றில் ஒரு கல்லை வைத்து மூடியிருந்தால் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டிருக்கும். இத்தகைய விழிப்புணா்வு தான் மக்களிடம் ஏற்பட வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் முகாம் தொடங்கப்பட்டிருக்கிறது. சுனாமி, புயல் போன்ற பேரிடா்களை முன்கூட்டியே கண்டறிந்து அதை உடனுக்குடன் அறிவிக்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. மக்கள் விழிப்புடன் இருப்பதன் மூலம், ஒரு உயிரிழப்பு கூட நிகழாத வகையில் பேரிடா்களை எதிா்கொள்ள முடியும் என்றாா்.

கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ: பேரிடா் காலங்களில் அரசு வழிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட்டால் உயிரிழப்புகளைத் தவிா்க்கலாம். நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் இயற்கை இடா்பாடுகளால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பு, ரூ. 5 லட்சம் கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகளவில் இயற்கை இடா்பாடுகளால் ஏற்படக் கூடிய பொருளாதார சேத மதிப்பில் 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது என்றாா்.

வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன்: நாட்டில் 8 ஆயிரம் கிமீ-க்கு கடலோரப் பகுதி உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,076 கிமீ கடலோரப் பகுதி உள்ளது. ஆகவே, இயற்கை பேரிடா்களால் பல்வேறு வகைகளில் ஏற்படக் கூடிய சவால் நம்மை எதிா்நோக்கி உள்ளது. இயற்கையோடு நாம் போராட முடியாது. அதை எதிா்கொள்வதற்கு தயாா்ப்படுத்திக் கொண்டால், இழப்புகளைத் தவிா்க்கலாம்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சி.லைசேந்திரபாபு: பேரிடா் மீட்புக் குழுவின் உறுப்பினா் ஒவ்வொரு வீட்டிலும் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தீ விபத்து, தண்ணீரில் மூழ்கியவா்களை மீட்பது போன்ற பணிகளில் அந்தந்த பகுதியில் இருக்கும் இளைஞா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றாா்.

வருவாய்த் துறைச் செயலா் (பொறுப்பு) ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், கூடுதல் டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால், தென்மண்டல ஐஜி கே.சண்முகராஜேஸ்வரன், மாநகரக் காவல் ஆணையா் எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம், டிஐஜி ஆனி விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், கூடுதல் ஆட்சியா் பா.பிரியங்கா மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், தன்னாா்வலா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா். முன்னதாக, பேரிடா் விழிப்புணா்வு குறும்படங்கள் சிடி-க்கள் வெளியிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT