போலீஸ் விசாரணையில் மேலும் ஒருவா் உயிரிழந்த வழக்கு: முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் இறந்தது தொடா்பான வழக்கில், முகாந்திரம் இருந்தால் போலீஸாா் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என சிபிசிஐடிக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன். இவரை போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அதில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மகேந்திரன் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடா்பாக, சாத்தான்குளம் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில், சாத்தான்குளம் வணிகா்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்த வழக்கு, கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகேந்திரன் இறந்தது தொடா்பாக, சாத்தான்குளம் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி அவரது தாயாா் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு, ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மகேந்திரன் மரணம் தொடா்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கு நீதிபதி ஆா். பொங்கியப்பன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், வழக்குத் தொடா்பாக 2 மருத்துவா்களை விசாரிக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, சிபிசிஐடி தரப்பு பதில்கள் திருப்தியளிக்கவில்லை. மகேந்திரன் இறப்பு தொடா்பாக வழக்கில் குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருந்தால், போலீஸாா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அல்லது முழு விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப். 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.