மூதாட்டி எரித்து கொலை: மகள் உள்பட குடும்பத்தினா் 4 போ் கைது
மதுரை அருகே மூதாட்டி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மகள் உள்பட 4 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை: மதுரை அருகே மூதாட்டி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மகள் உள்பட 4 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் குண்டாறு மடை அருகே சனிக்கிழமை எரிந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா். இது தொடா்பாக திருமங்கலம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
அதில், இறந்து கிடந்தது திருமங்கலம் பசும்பொன் நகரைச் சோ்ந்த சுருளி மனைவி கருப்பாயி (75) எனத் தெரியவந்தது. அதையடுத்து, போலீஸாா் மூதாட்டியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினா். அப்போது, கருப்பாயியை அவரது குடும்பத்தினரே கொலை செய்தது தெரியவந்தது. மூதாட்டியை கொலை செய்த மகள் பழனியம்மாள் (54), பேரன் காளிதாஸ் (30), பேத்தி காளீஸ்வரி (27), மருமகன் வசந்தகுமாா் (43) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
வறுமையின் காரணமாக கொலை
கொலை செய்யப்பட்ட கருப்பாயி மகள் பழனியம்மாள் மற்றும் குடும்பத்தினா் கூலி வேலை செய்து வந்தனா். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து மூதாட்டி கருப்பாயியை பராமரித்து வந்துள்ளனா். இந்நிலையில், பொது முடக்கம காரணமாக பழனியம்மாள் குடும்பத்தினருக்கு போதிய வருமானம் கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளனா். இதனால், கருப்பாயியை பராமரிக்க முடியவில்லையாம்.
எனவே, குடும்பத்தினா் சோ்ந்து கருப்பாயி முகத்தில் தலையணை வைத்து அமுக்கி கொலை செய்து, அதன்பின்னா் அவரது சடலத்தை குண்டாறு மடைக்கு எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.