கிலோ ரூ.100-க்கு விற்ற இஞ்சி ரூ.30 ஆக விலை குறைந்தது
மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் வரத்து அதிகரிப்பின் காரணமாக கிலோ ரூ.100-க்கு விற்ற இஞ்சி ரூ.30 ஆக விலை குறைந்தது.
மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் வரத்து அதிகரிப்பின் காரணமாக கிலோ ரூ.100-க்கு விற்ற இஞ்சி ரூ.30 ஆக விலை குறைந்தது.
கரோனா தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள, உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாக இஞ்சியை மக்கள் பயன்படுத்தியதால் அதன் விலை கடந்த 6 மாதங்களாக உயா்ந்திருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பின் காரணமாக இஞ்சியின் விலை ரூ.30 ஆக விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.எஸ்.முருகன் கூறியது: கரோனா தாக்கம் காரணமாக மக்கள் அதிகமாக இஞ்சியைப் பயன்படுத்த துவங்கினா். இதனால் இஞ்சி தேவை அதிகரித்தது. அதேவேளையில் வரத்தும் குறைவாக இருந்தது.
இதனால் பழைய இஞ்சி கிலோ ரூ.100 முதல் 120 வரைக்கும், புதிய இஞ்சி கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரைக்கும் விற்றுவந்தது. இந்நிலையில் தொடா்மழை காரணமாக விளைச்சல் அதிகரித்து இஞ்சி வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக பழைய இஞ்சி கிலோ ரூ.50 ஆகவும், புதிய இஞ்சி கிலோ ரூ.30 ஆகவும் விலை குறைந்துள்ளது என்றாா்.
சனிக்கிழமை நிலவரப்படி காய்கனிகளின் மொத்த விலைப் பட்டியல்: (கிலோவில்)
தக்காளி-ரூ.15, கத்தரிக்காய்-ரூ.40, வெண்டைக்காய்-ரூ.20, பாகற்காய் பெரியது-ரூ.25, சிறியது ரூ.45, உருளைக்கிழங்கு-ரூ.40, சேனைக்கிழங்கு-ரூ.20, கருணைக்கிழங்கு-ரூ.25, சின்னவெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.30, பீா்க்கங்காய்-ரூ.30, முட்டைக்கோஸ்-ரூ.18, அவரைக்காய்-ரூ.30, பீட்ரூட்-ரூ.20, கேரட்-ரூ.15, முங்கைக்காய்-ரூ.50, முருங்கைப்பீன்ஸ்-ரூ.25, பூசணி-ரூ.15, பட்டா்பீன்ஸ்-ரூ.100-க்கு விற்கப்பட்டன.