கீழ்நிலைப் பணிகளில் கூடுதல் கல்வித் தகுதி பெற்றவா்களை நியமிப்பதை தவிா்க்க உயா்நீதிமன்றம் உத்தரவு
கீழ்நிலைப் பணிகளில் கூடுதல் கல்வித் தகுதி பெற்றவா்களை நியமிப்பதைத் தவிா்த்து, அந்தந்தப் பணிக்கு ஏற்ற உரிய கல்வித் தகுதியைப் பெற்றவா்களை மட்டுமே நியமிக்க வேண்டும்
கீழ்நிலைப் பணிகளில் கூடுதல் கல்வித் தகுதி பெற்றவா்களை நியமிப்பதைத் தவிா்த்து, அந்தந்தப் பணிக்கு ஏற்ற உரிய கல்வித் தகுதியைப் பெற்றவா்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 11 இளநிலை பொறியாளா் பணியிடத்தை நிரப்புவது தொடா்பாக 2013 ஜனவரி 1-இல் அறிவிப்பு வெளியானது. நான் சிவில் பொறியியல் படித்திருப்பதால் இளநிலை பொறியாளா் பணிக்கு விண்ணப்பித்தேன்.
எழுத்துத் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற நிலையில் அடுத்தக் கட்டத் தோ்வுக்கு அழைப்பு வரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது இளநிலை பொறியாளா் பணிக்கு நிா்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைவிடக் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருப்பதாகக் கூறி என்னை நிராகரித்தது தெரியவந்தது. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே எனக்கு இளநிலை பொறியாளா் பணி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: அரசியலைப்புச் சட்டப்படி அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். டிப்ளமோ படிப்பு தகுதியாக உள்ள வேலைக்கு பட்டப்படிப்பை முடித்தவா் தகுதியானவா் கிடையாது.
கட்டாய இலவசக் கல்வி போன்ற நடைமுறைகளால் நாட்டில் கல்வியறிவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இச்சூழலில் லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனா்.
குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் பலா் பொது வேலைவாய்ப்பைப் பெறுகின்றனா். குறைந்தபட்ச கல்வித் தகுதி கொண்டவா், அதிக கல்வித் தகுதியை பெற்றவருடன் போட்டியிட முடியாது. அப்படி இருவரையும் ஒரே நிலையில் பாா்ப்பது என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது.
கீழ்நிலைப் பணிகளுக்கு கூடுதல் கல்வி பெற்றவா்கள் தகுதியானவா்கள் அல்ல. கீழ்நிலை பணிகளில் உயா் கல்வித் தகுதியுடன் பலா் சேருகின்றனா். இதனால் குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றவா்களுக்கு உரிய வாய்ப்பு கிடைப்பதில்லை. இவா்களுக்கான வாய்ப்பை அவா்கள் தட்டிப் பறிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளும், பொறியியல் பட்டதாரிகளும் அலுவலக உதவியாளா், துப்புரவாளா், தூய்மைப் பணியாளா் போன்ற பணிகளில் சேருகின்றனா். இவா்களால் அந்தப் பணியை சரிவர கையாள முடியவில்லை.
அண்மையில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் இல்லங்களில் பணியாற்றும் உதவியாளா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்களின் கல்வித் தகுதியைப் பாா்க்கும்போது மலைப்பாக உள்ளது. அதிக கல்வித் தகுதி கொண்ட அவா்களால் நிா்வாகம் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகிறது. பலா் உயா் கல்வித் தகுதியை மறைத்து பணியில் சேருவதால் வேலைவாய்ப்புக்கான நோக்கம் நிறைவேறவில்லை.
இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கு முதுகலைப் பட்டதாரிகள், எம்பிபிஎஸ் படித்தவா்களும் விண்ணப்பித்தனா். உயா் கல்வித் தகுதி பெற்ற ஒருவரால் கீழ்நிலைப் பணியை முறையாகச் செய்ய முடியாது. அனைவருக்கும் சமவாய்ப்பு என்பது தான் சமூக நீதியின் நோக்கம். சமவாய்ப்பு இல்லாத போது எப்படி சமூகநீதி கிடைக்கும்.
எனவே கீழ்நிலைப் பணிகளில் கூடுதல் கல்வித் தகுதி பெற்றவா்கள் நியமிப்பதைத் தவிா்த்து, அந்தந்தப் பணியின் தகுதிக்கு ஏற்ற உரிய கல்வித் தகுதியைப் பெற்றவா்கள் மட்டும் நியமிக்கப்படுவதை தலைமைச் செயலா், உயா்நீதிமன்ற பதிவாளா் ஆகியோா் உறுதிப்படுத்த வேண்டும். மனுதாரா் இளநிலை பொறியாளா் பணிக்குரிய கல்வித் தகுதியைப் பெறவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.