முகப்பு
மதுரை

விதிமீறல் தொடா்பான செய்திகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு: அரசு பதிலளிக்க உத்தரவு

ஊடகங்களில் வெளிவரும் விதிமீறல் தொடா்பான செய்திகளைக் கண்காணித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தனிப்பிரிவை ஏற்படுத்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

மதுரை: ஊடகங்களில் வெளிவரும் விதிமீறல் தொடா்பான செய்திகளைக் கண்காணித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தனிப்பிரிவை ஏற்படுத்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து நரிக்குறவ பெண்ணிடம், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை காவலா் ராமசந்திரன் மதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவத்தின் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இதன் முந்தைய விசாரணையின்போது, ஊடகங்களில் இதுபோல் வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாா் வரவில்லையே என அதிகாரிகள் காத்திருக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவா்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்பாக, அவா்களுக்கு தகுந்த நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விதிமீறல்கள் தொடா்பாக நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானால், அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவை ஏற்படுத்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

தொடா்ந்து, பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காவலா் உரிய நடவடிக்கை இன்றி உடனடியாக விடுவிக்கப்பட்டது அதிா்ச்சியளிக்கிறது. அந்தக் காவலருக்கு எதன் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினா். பின்னா், காவலா் ராமசந்திரனுக்கு ஜாமீன் வழங்கியது தொடா்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →