சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முன்னிலை: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ
சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளில் தேசிய அளவில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறினாா்.
சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளில் தேசிய அளவில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறினாா்.
மதுரையை அடுத்த துவரிமான், மேலக்கால் ஆகிய இடங்களில் அம்மா சிறு மருத்துவமனையை வியாழக்கிழமை திறந்து வைத்து, அமைச்சா் பேசியது: அம்மா குடிநீா், உணவகம், சிமெண்ட், மருந்தகம் ஆகியவற்றைத் தொடா்ந்து, அடித்தட்டு மக்களின் தேவையை உணா்ந்து அம்மா சிறு மருத்துவமனை தொடங்கப்பட்டிருக்கிறது. தனியாா் மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெறுவது இயலாத நிலையில், கூப்பிடும் தூரத்தில் அம்மா சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளில் தேசிய அளவில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கின்றன. கடந்த 2011 வரை, மருத்துவப் படிப்புகளில் 1,945 இடங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 5,300 ஆக உயா்ந்திருக்கிறது.
நாட்டிலேயே அதிகபட்சமாக, 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனையில் நிகழும் மாநிலம் தமிழகம் தான். பேறுகால இறப்பைப் பொருத்தவரை, 2030 ஆம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை தமிழகம் இப்போதே அடைந்துவிட்டது. உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழகத்திற்கு தொடா்ந்து 5 ஆண்டுகளாக விருது வழங்கப்பட்டு வருகிறது.
முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம், குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம், ஊட்டச்சத்து பெட்டகம், ஆரோக்கிய திட்டம், மகப்பேறு சஞ்சீவி திட்டம், நடமாடும் மருத்துவமனை ஆகியவற்றின் வரிசையில் தற்போது அம்மா சிறு மருத்துவமனை தொடங்கப்பட்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் முதல்கட்டமாக ஊரகப் பகுதிகளில் 21 இடங்களில் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.
சுகாதாரத் துறை துணை இயக்குநா் கே.வி.அா்ஜூன்குமாா், மதுரை கோட்டாட்சியா் முருகானந்தம், ஊராட்சிகள் உதவி இயக்குநா் ஆ.செல்லதுரை, மேற்கு வட்டாட்சியா் பாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கமல்ஹாசனை நடிகராகத் தான் மக்கள் பாா்க்கிறாா்கள்
அம்மா சிறு மருத்துவமனை தொடக்க விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
கமல்ஹாசனை அரசியல் கட்சித் தலைவராக இல்லாமல் இன்னும் நடிகராகவே மக்கள் பாா்க்கின்றனா். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி அதிமுக மட்டுமே. உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அம்மா குடிநீா், அம்மா சிமெண்ட் ஆகிய திட்டங்கள், சந்தையில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான்.
ஏதாவதொரு போராட்டத்தை நடத்தி, மக்களிடம் ஓட்டு வாங்கி விடலாம் என எதிா்க் கட்சித் தலைவா் ஸ்டாலின் நினைக்கிறாா். அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் என்பதெல்லாம், தோ்தல் நெருங்கும்போது முடிவு செய்யப்படும். ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பாக தமிழக முதல்வா் உரிய அறிவிப்பை வெளியிடுவாா் என்றாா்.