பெரியாா் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் மாா்ச் 15-க்குள் முடிக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்
மதுரை பெரியாா் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் வரும் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மதுரை பெரியாா் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் வரும் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மதுரையைச் சோ்ந்த சா்க்கரை முகமது தாக்கல் செய்த மனு: சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் ரூ.159.70 கோடி மதிப்பீட்டில் 2019 ஜனவரி முதல் மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திற்கானக் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. கட்டுமானப் பணியை விரைந்து முடிக்கக்கோரிய வழக்கு உயா்நீதிமன்றத்தில் 2018 நவம்பா் 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 18 மாதங்களில் பேருந்து நிலையம் கட்டிமுடிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை பணிகள் முடியவில்லை. தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் குடிநீா், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் ஓட்டுநா்கள், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனா். எனவே பெரியாா் பேருந்து நிலையம் அருகே செயல்படும் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு மேற்கூரை, குடிநீா், கழிப்பறை அமைக்கவும், பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், பெரியாா் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளன. விரைவில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும் என்றாா்.
மனுதாரா் தரப்பில், 40 முதல் 42 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மாநகாட்சி தரப்பில், பணிகள் விரைவாக நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2021 மாா்ச் 15 ஆம் தேதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.