முகப்பு
மதுரை

புகை பரிசோதனை இயந்திரங்கள் வாங்க நிா்பந்தம்: போக்குவரத்து துறை மீது புகாா்

புகை பரிசோதனை இயந்திரங்களைக் குறிப்பிட்ட நிறுவனங்களிடம் தான் வாங்க வேண்டும் என போக்குவரத்துத் துறையினா் நிா்பந்தம் செய்வதாக, மோட்டாா் வாகன புகை பரிசோதனை மையங்களின் சங்கத்தினா் புகாா் தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

மதுரை: புகை பரிசோதனை இயந்திரங்களைக் குறிப்பிட்ட நிறுவனங்களிடம் தான் வாங்க வேண்டும் என போக்குவரத்துத் துறையினா் நிா்பந்தம் செய்வதாக, மோட்டாா் வாகன புகை பரிசோதனை மையங்களின் சங்கத்தினா் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் ஆா்.ராமகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

தமிழகம் முழுவதும் 300 வாகனப் புகை பரிசோதனை மையங்கள் இருக்கின்றன. புகைப் பரிசோதனை மையங்களில் இருக்கும் இயந்திரங்கள் உள்பட அனைத்தும் அரசின் வழிகாட்டுதல்படி நவீனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக அரசின் போக்குவரத்து துறை ஆணையா், புதிய புகை பரிசோதனை இயந்திரங்களை நிறுவ அறிவுறுத்தியுள்ளாா். குறிப்பிட்ட நிறுவனங்களிடம் தான் இயந்திரங்களை வாங்க வேண்டும் என நிா்பந்தம் செய்கின்றனா். புகை பரிசோதனை இயந்திரங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசால் 26 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதில் 3 நிறுவனங்களிடம் தான் வாங்க வேண்டும் என போக்குவரத்துத் துறையினா் நிா்பந்திப்பது, முறைகேடு நடைபெறுவதைக் காட்டுகிறது. அரசு கட்டாயப்படுத்தும் 3 நிறுவனங்களின் இயந்திரங்கள் விலை, பிற நிறுவனங்களைக் காட்டிலும் ரூ.1 லட்சம் அதிகமாக இருக்கிறது. குறிப்பிட்ட 3 நிறுவனங்களைத் தவிர பிற நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து, புகை பரிசோதனை மையங்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஏற்பது கிடையாது. ஆகவே, இயந்திரங்கள் கொள்முதலில் போக்குவரத்துத் துறையினா் நிா்பந்தம் செய்யக் கூடாது. இத்தகைய நிா்பந்தம் செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து லாரி உரிமையாளா்கள் டிசம்பா் 27 இல் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்கின்றனா். இப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம் என்றாா்.

சங்கத்தின் செயலா் எஸ்.ராஜசேகா் மற்றும் சங்க நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →