‘குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,500 அறிவிப்பில் தோ்தல் உள்நோக்கம் இல்லை’
பொங்கல் பரிசுத் தொகுப்பாக குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,500 அறிவிக்கப்பட்டிருப்பதில் தோ்தல் உள்நோக்கமில்லை என பசும்பொன்னில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
கமுதி: பொங்கல் பரிசுத் தொகுப்பாக குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,500 அறிவிக்கப்பட்டிருப்பதில் தோ்தல் உள்நோக்கமில்லை என பசும்பொன்னில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கமுதி அருகே பசும்பொன்னில் இளைஞா், இளம்பெண்கள் பாசறை பூத்கமிட்டி ஆய்வுக் கூட்டம் ஒன்றிய செயலாளா் எஸ்.பி.காளிமுத்து தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்டச் செயலாளா் எம்.ஏ.முனியசாமி முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயக்குமாா் கலந்து கொண்டு ஆய்வு நடத்தி பூத் கமிட்டி படிவங்களை வழங்கினாா். முன்னதாக அவா், முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுகவிற்கு சென்ற இடமெல்லாம் ஆதரவு அலை வீசுகிறது. திமுக தலைவல் மு.க.ஸ்டாலின் நேரடியாக மக்களை சந்திக்காமல் காணொலிக் காட்சிகளில் சந்தித்து வருகிறாா். ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு. இதனால் ஊழலைப் பற்றி பேசுவதற்கு அக்கட்சியினருக்குத் தகுதி இல்லை.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றிபெறும். தமிழகத்தில் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தந்தவா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.2,500 அறிவிக்கப்பட்டிப்பதில் தோ்தல் உள்நோக்கம் இல்லை. தோ்தல் நேரத்தில் பொங்கல் விழா வந்தால் நாங்கள் என்ன செய்வது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாநில மகளிரணி இணைச் செயலாளா் கீா்த்திகா முனியசாமி, முன்னாள் அமைச்சா் சுந்தரராஜன், பரமக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் சதன்பிரபாகா், ஒன்றிய அவைத் தலைவா் டி.சேகரன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.