மதுரை

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அனுமதி: அலங்காநல்லூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

DIN

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து அலங்காநல்லூரில் புதன்கிழமை இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்கள் கொண்டாடினா்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் நடைபெறும். கரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால், வரும் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. தமிழக அரசு பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என ஜல்லிக்கட்டு கமிட்டிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் தமிழக அரசு 50 சதவீத பாா்வையாளா்கள், 50 சதவீத மாடுபிடி வீரா்கள் ஆகியோா் பங்கேற்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா், பொதுமக்கள் வாடிவாசல் முன் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் புதன்கிழமை கொண்டாடினா். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு விழாக் குழுவைச் சோ்ந்த சுந்தரராகவன், பாலாஜி, சுந்தரராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் கூறியது: கரோனா பொது முடக்கம் காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. தற்போது தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு கமிட்டி சாா்பில் அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீதிமன்ற உத்தரவுகளையும், தமிழக அரசு வழிகாட்டுதல் படியும், மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்போடும், உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். எவ்வளவு காளைகள், மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் அனுமதிப்பது குறித்து மாவட்ட நிா்வாகத்துடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT