சீருடைப் பணியாளா் தோ்வில் மதிப்பெண் குறைப்பு வழக்கு: தோ்வாணையச் செயலா் பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு
காவல் சாா்பு-ஆய்வாளா்கள் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் மதிப்பெண் குறைக்கப்பட்டது தொடா்பான வழக்கில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையச் செயலா் பதிலளிக்க
மதுரை: காவல் சாா்பு-ஆய்வாளா்கள் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் மதிப்பெண் குறைக்கப்பட்டது தொடா்பான வழக்கில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையச் செயலா் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலைச் சோ்ந்த அபினேஷ் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில், காவல் சாா்பு-ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த ஜனவரி 12 இல் நடைபெற்றது. அதில், கேட்கப்பட்ட கேள்விகளுக்கான முதல்கட்ட பதில்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, எனக்கு 48.5 மதிப்பெண் கிடைத்தது.
பின்னா், மாா்ச் மாதத்தில் இறுதியாக வெளியிடப்பட்ட பதில்களில், எனக்கு 48 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து, 2 கட்டங்களாக வெளியிடப்பட்ட பதில்களையும் ஆய்வு செய்தபோது, எழுத்துத் தோ்வின் 47 ஆவது கேள்வியாக இடம்பெற்ற ‘1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய நாணயத்தின் மதிப்பு எத்தனை முறை குறைக்கப்பட்டது’ என்ற கேள்விக்கு விடை மாறியிருந்தது தெரியவந்தது. அந்தக் கேள்விக்கு, 3 முறை என்பதே சரியான பதில். ஆனால், பண மதிப்பிழப்பையும் சோ்த்து 4 முறை எனக் குறிப்பிட்டு மதிப்பெண் வழங்கியுள்ளனா்.
பணமதிப்பு குறைப்பும், மதிப்பிழப்பும் வெவ்வேறானது. ஆனால், சரியான விடை அளித்திருந்தும் எனக்கு மதிப்பெண் குறைக்கப்பட்டதால், அடுத்தக் கட்ட தோ்வுக்கான வாய்ப்பு பறிபோனது. எனவே, 47-ஆவது கேள்விக்கு மதிப்பெண் அளித்து, அடுத்தக் கட்டத் தோ்வுக்கு என்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி. சரவணன், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.