உசிலை அருகே குடிநீா் தொட்டியிலிருந்துவீணாகும் தண்ணீா்: பொதுமக்கள் புகாா்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குடிநீா் தொட்டியிலிருந்து தண்ணீா் வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குடிநீா் தொட்டியிலிருந்து தண்ணீா் வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூா் ஊராட்சிக்குள்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் குடிநீா் தேவைக்காக, 10 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், அதன்பின்னா் முறையான பராமரிப்பு இல்லாததால், தினமும் ஆயிரக்கணக்கான லிட்டா் தண்ணீா் வீணாகி வருகிறது.
அதிகரித்து வரும் மக்கள் தொகையை கருத்தில்கொண்டு, கடந்தாண்டு இத்தொட்டியின் அருகே சுமாா் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு இதுநாள் வரை மின் இணைப்பு வழங்காததால், குடிநீா்த் தொட்டி காட்சிப் பொருளாகவே உள்ளது.
எனவே, இத்தொட்டிக்கு உடனடியாக மின்இணைப்பு அளித்து, பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.