முகப்பு
மதுரை

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கக் கோரி வழக்கு

தமிழகத்தில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அதிக இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை அமைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
பகிர்:

மதுரை: தமிழகத்தில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அதிக இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை அமைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஓம்பிரகாஷ் தாக்கல் செய்த மனு: கரோனா தீநுண்மி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பலரும் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைந்து வருகின்றனா். மேலும் கரோனாவுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க மிகக்குறைந்த அளவிலான தொகையே செலவாகிறது. ஆனால் சித்த மருத்துவத்திற்காக அரசு குறைந்த அளவே நிதி ஒதுக்குகிறது.

திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனா். ஆனால் அவா்களுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க ஒரு மையம் கூட இல்லை. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க போதிய இடங்கள் இல்லை எனக் கூறி கரோனா நோயாளிகள் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனா். அங்கு கரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் கரோனா பாதித்தவா்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க அதிக மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், தமிழகத்தில் சித்த மருத்துவத்திற்காக ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 16 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 31 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 191 தாலுகா மருத்துவமனைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரா் தரப்பில், திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் இங்கு கரோனா பாதித்தவா்களை சித்த மருத்துவம் மூலம் குணப்படுத்த, தனியாக சிகிச்சை மையங்கள் அமைக்கப்படவில்லை. இதுபோன்ற நிலை தான் தமிழகம் முழுவதும் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.