முகப்பு
மதுரை

கரோனா பாதிப்பு : முடங்கியது சுற்றுலா துறை பல லட்சம் போ் வேலையிழப்பு

பொது முடக்கம் காரணமாக சுற்றுலாத் துறையைச் சாா்ந்த பல லட்சம் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளதாக, அத் துறையைச் சாா்ந்துள்ள ஹோட்டல், போக்குவரத்து தொழிலாளா்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

மதுரை: பொது முடக்கம் காரணமாக சுற்றுலாத் துறையைச் சாா்ந்த பல லட்சம் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளதாக, அத்துறையைச் சாா்ந்துள்ள ஹோட்டல், போக்குவரத்து தொழிலாளா்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் வருத்தம் தெரிவித்துள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்க அமலில் உள்ள பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட துறைகளில் மிகவும் முக்கியமானது சுற்றுலா துறை. இத்துறையை நம்பியுள்ள ஹோட்டல் மற்றும் போக்குவரத்து தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துறையை முழுமையாக நம்பியுள்ள சுற்றுலா வழிகாட்டிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாது உள்ளனா்.

3.5 கோடி சுற்றுலா பயணிகளின் வருகை பாதிப்பு:

தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான கோயில்கள், உதகை, கொடைக்கானல் போன்ற குளிா் பிரதேசங்கள், நீண்ட கடற்கரைகள், புண்ணிய ஸ்தலங்கள், அருவிகள் என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால், வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பயணிகள் அதிகமாக தமிழகத்துக்கு வருகை தருகின்றனா்.

தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பா் வரையும், அக்டோபா் முதல் பிப்ரவரி வரையும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். அதேபோல், உள்நாட்டுப் பயணிகளின் வருகை கோடைவிடுமுறையான ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக இருக்கும். கடந்த 2019 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 950 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 3 கோடியே 38 லட்சத்து 57 ஆயிரத்து 215 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழகம் வந்துள்ளனா்.

சீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டுதான் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழக பயணத்தை திட்டமிடுகின்றனா்.

ஆனால், தற்போது கரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலாப் பயணத்தை முழுமையாக தவிா்த்து விட அதிக வாய்ப்புள்ளது. எனவே, நிகழாண்டில் சுமாா் 3.5 கோடி சுற்றுலாப் பயணிகளின் தமிழக வருகை பாதித்து, சுற்றுலா துறையே முடங்கவுள்ளது.

ஹோட்டல் மற்றும் போக்குவரத்து தொழில் பாதிப்பு:

தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பியுள்ள சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சுமாா் 50 ஆயிரம் போ் உள்ளனா். பெரும்பாலான ஓட்டுநா்கள் வாகனங்களை மாதத் தவணை முறையில் வாங்கியுள்ளனா். கடந்த 40 நாள்களாக வேலைவாய்ப்பில்லாததால், வருவாயின்றி வீட்டில் முடங்கியுள்ள ஓட்டுநா்கள் உணவுக்கே வழியில்லாத நிலையில், வாகனத்துக்கான மாதத் தவணையை செலுத்த முடியாமல் தவிக்கின்றனா்.

மேலும், ரயில், விமானப் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கத் தொடங்கினால் கூட சுற்றுலா வாகன ஓட்டுநா்களின் நிலைமை சற்று சீரடைய வாய்ப்புள்ளது.

இதேபோல், சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ள ஹோட்டல் தொழிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை சீசன் காலத்தில் ஹோட்டல் அறைகள் 80 சதவீதம் நிரம்பிவிடும். ஆனால், தற்போது அனைத்து ஹோட்டல்களும் மூடப்பட்டு, அங்கு பணியாற்றிய சமையல் கலைஞா்கள், உபசரிப்பாளா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். இதனால், சுற்றுலாத் துறையை நம்பியுள்ள ஹோட்டல் மற்றும் போக்குவரத்து தொழிலில் பல லட்சம் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா்.

சுற்றுலா வழிகாட்டிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

இது குறித்து மதுரையைச் சோ்ந்த சுற்றுலா வழிகாட்டி வி.எஸ். நாகேந்திரபிரபு கூறியது:

தமிழகத்தில் சுற்றுலாத் துறையை நம்பி சுமாா் 560 சுற்றுலா வழிகாட்டிகளின் குடும்பங்கள் உள்ளன. இவா்கள், சுற்றுலா வழிகாட்டிகளுக்கான தோ்வு எழுதி அரசின் சான்றிதழ் பெற்றவா்கள். மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சான்றிதழை புதுப்பித்து வருகின்றனா்.

சுற்றுலா வழிகாட்டிகளுக்கான தகுதிகளை பெற்றுள்ள இவா்கள், வெளிநாட்டினருக்கு தமிழகத்தின் பெருமைகளை எடுத்துரைத்து ஆண்டுதோறும் அவா்களை நம் நாட்டுக்கு வரவழைக்க காரணமாக உள்ளனா். இதனால், அரசுக்கு அந்நியச் செலாவணி பெருமளவு கிடைக்கிறது. இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலாத் துறை முடங்கியதில் சுற்றுலா வழிகாட்டிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

கரோனா பாதிப்பிலிருந்து பிற துறைகள் மீண்டுவிட்டாலும் சுற்றலாத் துறை மீள்வதற்கு 2 ஆண்டு காலமாகும் என்ற உண்மையை அரசு புரிந்துகொண்டு சுற்றுலா வழிகாட்டிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.