முகப்பு
மதுரை

’தூக்குத் தண்டனை அளித்தால் தான் லஞ்சம் பெறுவது தடுக்கப்படும்’

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
’தூக்குத் தண்டனை அளித்தால் தான் லஞ்சம் பெறுவது தடுக்கப்படும்’
பகிர்:

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி, சென்னையைச் சோ்ந்த சூரியபிரகாசம் என்பவா் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

முந்தையை விசாரணையின்போது, இது குறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் தற்போது 862 நேரடி கொள்முதல் மையங்கள் உள்ளன. கரோனா காலத்தில் 2 லட்சத்து 48 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 12,77,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.2,416 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நெல் மூட்டைக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை லஞ்சம் கேட்கிறாா்கள் என்பது உண்மையல்ல. கடந்த பருவத்தில் கொள்முதல் மையங்களில் சிறப்பு குழுக்கள் மூலம் 1,725 ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது முறைகேட்டில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை ஊடகங்கள் வாயிலாகப் பாா்க்க முடிந்தது.

லஞ்ச ஒழிப்புத் துறையினா் பல இடங்களில் சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்துள்ளனா். ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால்தான் இதுபோன்ற குற்றங்கள் சரிசெய்யப்படும்.

மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதில் மனுவில் குறிப்பிடும்போது, கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைக்கு ஊழியா்கள் லஞ்சம் கேட்கிறாா்கள் என்பது உண்மையல்ல எனக் கூறுவது எப்படி? இது நீதிமன்றத்துக்கு தவறான தகவலை அளிப்பதாகாதா? எனக் கேள்வி எழுப்பினா்.

பின்னா், முறைகேட்டில் ஈடுபட்ட 105 போ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? வழக்குப் பதிவு, கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? எவ்வளவு தொகை பறிமுதல் செய்யப்பட்டது? அதிரடி சோதனை செய்தவா்கள் யாா்? என்பது குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

விவசாயம் அநாதை ஆக்கப்பட்டு வருகிறது

விவசாயிகள் இரவு, பகலாக உயிரைக் கொடுத்து உழைத்து விளைவிக்கும் நெல்லுக்கு உரிய மதிப்பளிக்கப்படுவதில்லை. விவசாயம் செய்ய தற்போது யாரும் முன்வருவதில்லை. நமது நாட்டில் விவசாயம் அநாதை ஆக்கப்பட்டு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு விலை உயரும்போது மட்டும் அதை யாரும் ஏற்பதில்லை. விவசாயத்துக்கான செலவீனங்களை யாரும் கருத்தில் கொள்வதில்லை எனவும் கருத்து தெரிவித்தனா்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு, லஞ்சமில்லா நிா்வாகம் தொடா்பாக அறிக்கை அளித்துள்ளது. அதன் பரிந்துரைகளில் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஒவ்வொரு நிலையிலும் சொத்து விவரத்தை நிா்ணயம் செய்யக் கூறியது. அதனை, அனைத்து துறை செயலா்களும் ஏற்றுக்கொண்டுள்ளனா். அதனடிப்படையில், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நவம்பா் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →