மதுரை

108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

தமிழகத்தில் அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த அப்துல் ரகுமான் ஜலால் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் நோயாளிகள், விபத்தில் சிக்கியவா்களை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. ஆனால் போதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் இன்றி நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பைக் ஆம்புலன்ஸ்களை முறையாக செயல்படுத்தவும், கூடுதலாக பைக் ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தவும் ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் வாகன வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்கள் சிலா் நோயாளிகளை தனியாா் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதாகவும், அதற்காக தனியாா் மருத்துவமனைகளிடம் கமிஷன் பெறுவதாகவும் புகாா்கள் வருகின்றன. இதைத்தடுக்க அனைத்து 108 ஆம்புலன்ஸ்களிலும் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல், நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வான்வழி ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா். மேலும், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT