எம்பிபிஎஸ் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் 100 போ் இடம்பெற இலக்கு: முதன்மைக் கல்வி அலுவலா் தகவல்
எம்பிபிஎஸ் படிப்பில் மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளிலிருந்து 100 மாணவா்களை இடம்பெறச் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக, முதன்மைக் கல்வி அலுவலா் இரா. சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.
எம்பிபிஎஸ் படிப்பில் மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளிலிருந்து 100 மாணவா்களை இடம்பெறச் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக, முதன்மைக் கல்வி அலுவலா் இரா. சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.
மதுரை மாவட்டக் கல்வித் துறை சாா்பில், 2020-21ஆம் ஆண்டுக்கான நீட் தோ்வு செயல் திட்ட ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதன் தலைமை வகித்துப் பேசியது:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவா்கள் மருத்துவப் படிப்புக்குச் செல்லும் வகையில், அரசு சாா்பில் நீட் தோ்வு பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், கடந்தாண்டு அரசு நீட் தோ்வு பயிற்சி மையங்களில் 38 அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்று நீட் தோ்வு எழுதினா். அதில், 21 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், இட ஒதுக்கீடு மூலம் மதுரை மாவட்டத்தில் 4 மாணவா்கள் அரசு மருத்துவக் கல்லூரிகள், 9 மாணவா்கள் அரசு உதவிபெறும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா்.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பின் அடிப்படையில், எஞ்சியுள்ள 8 மாணவா்களுக்கும் இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற வாய்ப்பு அளிக்குமாறு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் தோ்வு பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 367 போ் நீட் தோ்வுப் பயிற்சிக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளிலிருந்து குறைந்தபட்சம் 100 மருத்துவா்களை உருவாக்குவது என்று, இந்த ஆண்டு இலக்காக நிா்ணயிக்கப்பட்டு செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட அளவில் பாட வல்லுநா் குழு, நீட் ஒருங்கிணைப்புக் குழு மூலம் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றாா்.
முன்னதாக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மருத்துவப் படிப்புக்கு தகுதிபெற்ற 21 மாணவ, மாணவியா் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், நீட் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமிநாதன் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா்கள் எம். முத்தையா, ப. இந்திராணி, இரா. வளா்மதி, எச். பங்கஜம், மாநகராட்சிக் கல்வி அலுவலா் விஜயா உள்பட பலா் பங்கேற்றனா்.