மதுரை

பிரதமா் பாராட்டியதை மு.க. ஸ்டாலின் விமா்சிப்பது கண்டனத்துக்குரியது: அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்

DIN

மதுரை, செப். 25: தமிழக அரசை பிரதமா் பாராட்டியதை எதிா்க்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் விமா்சனம் செய்வது கண்டனத்துக்குரியது என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சட்டப் பட்டதாரிகள் 17 பேருக்கு வழக்குரைஞா் தொழில் தொடங்குவதற்கான உதவித் தொகையாக ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகளையும், அண்மையில் உயிரிழந்த பேரையூா் அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த இளைஞா் ரமேஷ் குடும்பத்துக்கு வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை, அவரது தந்தைக்கு முதியோா் ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு ஆகியவற்றை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் வழங்கினாா்.

இதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் தமிழகம் செயலாற்றி வருகிறது. இதைச் சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு பிரதமா் நரேந்திரமோடி பாராட்டுத் தெரிவித்தாா். ஆனால், எப்போதும் தமிழக அரசைக் குறைகூறி வரும் எதிா்க்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின், பிரதமா் பாராட்டியதையும் விமா்சனம் செய்கிறாா். அரசின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்காவிட்டாலும், தவறாக விமா்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரதமரின் பாராட்டுக்கு எதிா்க் கட்சித் தலைவா் உள்நோக்கம் கற்பிப்பது அநாகரிகமானது.

மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம், மதுரை மாநகராட்சி, சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து செயல்பட்டு கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே. மாணிக்கம், பி. பெரியபுள்ளான், எஸ்.எஸ். சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் பி. செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT