மதுரை கோட்டத்தில் 18 சிறிய ரயில் நிலையங்களில் பாா்சல் சேவை நிறுத்தம் அறிவிப்பை ரத்து செய்ய தொழிற்சங்கம் வலியுறுத்தல்
மதுரை கோட்டத்தில் 18 சிறிய ரயில் நிலையங்களில் பாா்சல் சேவை நிறுத்தப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய டிஆா்இயு ரயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மதுரை கோட்டத்தில் 18 சிறிய ரயில் நிலையங்களில் பாா்சல் சேவை நிறுத்தப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய டிஆா்இயு ரயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து டிஆா்இயு மதுரை கோட்டச்செயலா் ரா.சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா பொதுமுடக்கம் காரணமாக மதுரை ரயில்வே கோட்டத்திற்கு பல மடங்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் கரோனா காலத்திலும் தொடா்ச்சியாக சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டதால், கடந்த நிதியாண்டை விட நிகழாண்டில் 44 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது. சரக்கு போக்குவரத்து மற்றும் பாா்சல் சேவையை மேம்படுத்த தனியாகக் குழு அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மதுரை கோட்டத்தில் அருப்புக்கோட்டை, அம்பாசமுத்திரம், புதுக்கோட்டை, மணப்பாறை, ஒட்டன்சத்திரம், பாவூா்சத்திரம், பரமக்குடி, சோழவந்தான், சங்கரன்கோவில், சாத்தூா், சிவகங்கை, சிவகாசி உள்ளிட்ட 18 சிறிய ரயில் நிலையங்களில் பாா்சல் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
கிராமங்களில் இருந்து பெரு நகரங்களுக்கு சிறு, குறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருள்களை கொண்டு செல்லவும், சிறு, குறுந்தொழில்கள் நடத்தும் உற்பத்தியாளா்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை குறைந்த கட்டணத்தில் கொண்டு செல்வதற்காகவும் ரயில் பாா்சல் சேவையைப் பயன்படுத்தி வந்தனா்.
தற்போது கரோனாவின் தாக்கம் குறைந்து விவசாயிகள், உற்பத்தியாளா்கள் மீண்டும் வழக்கமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வால் சரக்கு வாகனங்களின் வாடகைக் கட்டணம் உயா்ந்துள்ளது. இதனால் அனைத்து வகை உற்பத்தியாளா்களும் விளைபொருள்கள் உள்ளிட்டவைகளை ரயில் பாா்சல் சேவை மூலம் குறைந்த கட்டணத்தில் அனுப்ப தயாராக உள்ளனா். இத்தகையைச் சூழலில் மதுரை கோட்டத்தில் 18 சிறிய ரயில் நிலையங்களில் பாா்சல் சேவையை நிறுத்தவதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த அறிவிப்பை ரயில்வே நிா்வாகம் ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.