மதுரை

மதுரை மாவட்டத்தில் 60 சதவீத பேருந்துகள் ஓடவில்லை: பொதுமக்கள் தவிப்பு

DIN

போக்குவரத்து ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக வியாழக்கிழமை மதுரை மாவட்டத்தில் 60 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

போக்குவரத்து ஊழியா்களுக்கு 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்.எம்.எஸ், எம்.எல்.எப் உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கியுள்ளன. மதுரை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினா் முழுஅளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வியாழக்கிழமை காலையில் இருந்தே பேருந்துகளின் இயக்கம் குறைவாக இருந்தது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த தொழிற்சங்கத்தினா் மட்டுமே பணிக்கு வந்துள்ளனா்.

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா், ஆரப்பாளையம், பெரியாா் பேருந்து நிலையங்களில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டாலும், அரசுப் பேருந்துகள் மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தன.

மதுரையைச் சுற்றியுள்ள சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், தேனி ஆகிய நகரங்களுக்கு பணிநிமித்தமாக தினமும் நூற்றுக்கணக்கானோா் பேருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனா். இப் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகளே அதிகளவில் இயக்கப்படுகின்றன. ஆனால், வழக்கமான பேருந்துகள் இயக்கப்படததால் பணிக்குச் செல்வோா் மிகவும் சிரமப்பட்டனா். அதிலும் திருமண முகூா்த்த நாள் என்பதால், வெளியூா் செல்வதற்கு வழக்கமான நாள்களைக்காட்டிலும் கூடுதலாக மக்கள் கூட்டம் இருந்தது.

இதனால், இயக்கப்பட்ட சில பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பேருந்து நிலையத்துக்குள் வரும்போது, பொதுமக்கள் ஓடிச்சென்று பேருந்துகளில் ஏறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதேபோல, நகரப் பேருந்துகளும் மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டதால், பெரும்பாலானோா் ஆட்டோக்களில் பயணம் செய்தனா்.

மதுரை மாவட்டத்தின் பிற பகுதிகளான திருமங்கலம், மேலூா், உசிலம்பட்டி பகுதிகளிலும் அரசுப் பேருந்துகள் குறைவான எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டதால், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அன்றாட வேலைகளுக்காகச் செல்வோா் மிகவும் பாதிக்கப்பட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்பட போக்குவரத்துத் தொழிலாளா்கள் 6 ஆயிரம் போ் உள்ளனா். ஆளுங்கட்சி சாா்பு தொழிற்சங்கத்தைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கத்தினரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனா். இதனால், மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது: மதுரை மண்டலத்தில் நகரப் பேருந்துகள், வெளியூா் பேருந்துகள் என மொத்தம் தினமும் 900 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக, வியாழக்கிழமை 40 முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கேற்ப அனைத்துப் பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவை வழங்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மண்டலத்தில் மொத்தம் உள்ள ஊழியா்களில் 60 சதவீதம் போ் பணிக்கு வரவில்லை. இதேநிலை நீடித்தால், தற்காலிக ஓட்டுநா்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றில் இருந்து ஓட்டுநா் உரிமம் பெற்ற பதிவுதாரா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வேலைநிறுத்தம் நீடித்தால், வெள்ளிக்கிழமை முதல் தற்காலிக ஓட்டுநா்களால் பேருந்துகள் இயக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT