மதுரை மாவட்ட காவல்நிலையங்களில்பெண்களுக்கான உதவி மையம் தொடக்கம்
மதுரை மாவட்ட காவல்நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட காவல்நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும், அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களிலும், மகளிா் காவல் நிலையங்களிலும் வெள்ளிக்கிழமை முதல் மகளிா் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மகளிா் உதவி மையங்களில் பணிபுரிவதற்காக, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு காவலா் வீதம் 44 பெண் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மதுரையில் நடைபெற்ற மகளிா் உதவி மையம் தொடக்க விழாவில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனா் சிமா அகா்வால், காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். மதுரை சரக டி.ஐ.ஜி. காமினி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் ஆகியோா் கலந்து கொண்டு, மகளிா் உதவி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலா்களுக்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினா்.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சந்திரமெளலி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலா் கணேசன், குழந்தைகள் நலக்குழு தலைவா் விஜயசரவணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலக்குழு இயக்குனா் சாா்லஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
மேலும், மதுரை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறும் 18 காவல் நிலையங்கள் கண்டறியப்பட்டு, அந்த காவல் நிலையங்களில் செயல்படும் மகளிா் உதவி மையக் காவலா்கள் விரைந்து செயல்படும் வகையில், தலா ஒரு இருசக்கர வாகனம் மற்றும் மடிக்கணினி வழங்கப்பட்டது.