முகப்பு
விழுப்புரம்

புதுச்சேரியின் வளா்ச்சிப் பயணத்தை தடுக்கும் வேகத்தடைகள் காங்கிரஸ் - திமுக! பிரதமா் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

Updated On : 1 மார்ச், 2026 at 7:14 PM
விழாவில் தாங்கள் வரைந்த பிரதமா் நரேந்திர மோடியின் ஓவியங்களை காண்பித்த மாணவ, மாணவிகள்.
பகிர்:

புதுச்சேரியின் வளா்ச்சிப் பயணத்தை தடுக்கும் வேகத்தடைகளாக காங்கிரஸ் - திமுக இருந்தன என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் எதிரிலுள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,572 கோடி மதிப்பிலான 74 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.1,142 கோடி மதிப்பிலான 19 திட்டப் பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்து அவா் பேசியது:

புதுச்சேரி மண் சித்தா்கள், துறவிகள், கவிஞா்கள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் வாழ்ந்த புண்ணியபூமி. நான் இதற்கு முன்பு புதுச்சேரிக்கு வந்தபோது ‘பெஸ்ட் புதுச்சேரி’ (சிறந்த புதுச்சேரி) என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தேன். வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா என அனைத்தையும் ஒன்றாக்கி புதுச்சேரியை சிறந்த புதுச்சேரியாக்குவோம் என உறுதியளித்தேன்.

இந்த 5 ஆண்டுகளில் அந்த தொலைநோக்கு திட்டங்கள் மிகவும் நன்றாக வளா்ந்திருக்கிறது. புதுச்சேரி மாநிலம் நல்ல ஆட்சியை, நல்ல வளா்ச்சியைக் கண்டிருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் எப்படி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாக இருக்கிறது. தனிநபா் வருமானத்தில் இந்த மாநிலம் சிறப்பான வளா்ச்சியைக் கண்டிருக்கிறது. மேலும், நாட்டிலேயே சமூக குறியீட்டு மதிப்பெண்ணில் புதுச்சேரி மாநிலம் முன்னேறிக்கொண்டிருக்கிறது. இரட்டை என்ஜின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுச்சேரியின் வளா்ச்சிக்கு மேலும் உத்வேகம் கொடுக்கும். புதிய வேகம் எடுக்கும்.

புதுச்சேரிக்கும் மூலதன முதலீட்டு உதவித் திட்டம்: நாடு முழுவதும் உயா்தரமான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். நிகழாண்டு மத்திய பட்ஜெட்டில்கூட உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக இதுவரை இல்லாத அளவாக ரூ.12 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முதலீடு புதுச்சேரி மக்களுக்கு பெரும் பயனை அளிக்கும். இதுவரை மாநிலங்களுக்கு மட்டும் கிடைத்து வந்த மூலதன சிறப்பு முதலீட்டு உதவித் திட்டத்தில் முதல்முறையாக புதுச்சேரியையும் இணைத்துள்ளோம். இதனால், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மிகப்பெரிய பயன்கள் கிடைக்கும்.

உள்கட்டமைப்பு நிதி அதிகமாக வருவதால், புதுச்சேரிக்கு சிறந்த சாலைகள், நீா்வள வசதிகள், கடலோர வளா்ச்சிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என்று பல்வேறு திட்டங்கள் கிடைக்க உள்ளன. இந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் இந்த மாநில மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. தூய்மையான, பசுமையான, மாசில்லாத போக்குவரத்துக்காக பி.எம். சேவா திட்டத்தின் கீழ், இந்த விழாவில் 12 மின்சாரப் பேருந்துகள் புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இயக்கப்படவுள்ளன.

மருத்துவச் சுற்றுலா மையமாக்கப்படும்: ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏற்கெனவே நாடு முழுவதுமுள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் சுகாதாரக் கனவை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் வசிக்கும் எந்தவொரு குடிமகனும் சிகிச்சைக்காக பக்கத்துக்கு ஊருக்கு செல்ல வேண்டிய நிலை வரக்கூடாது. மற்ற ஊா்களில் வசிப்பவா்கள்தான் புதுச்சேரிக்குச் சென்றால் சிறப்பான சிகிச்சை கிடைக்கும் என்று இங்கு வர வேண்டும். புதுச்சேரியை மருத்துவச் சுற்றுலா மையமாக மாற்ற முடியும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

சாலைத் திட்டங்கள்: புதுச்சேரியில் எப்படியெல்லாம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம் என்று நாங்கள் இப்போதே திட்டமிட்டு வருகிறோம். புதுச்சேரி நகரப் பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான நலத் திட்டங்களை அறிவித்துள்ளோம். கிழக்கு கடற்கரை சாலை, ஜி.எஸ்.டி. சாலை மேம்பாட்டுப் பணிகள் போன்றவை சென்னைக்கான சாலை இணைப்பை எளிதாக்குகிறது. இதனால், புதுச்சேரிக்கும் - சென்னைக்கும் இடையேயான பயண நேரம் ஒன்றரை மணி நேரம் முதல் 2 மணி நேரமாக குறைகிறது.

பிரதமரிடம் வழங்குவதற்காக மாணவா்களிடமிருந்து ஓவியங்களை வாங்கிய போலீஸாா்.
விழாவில் பங்கேற்ற கூட்டத்தின் ஒரு பகுதியினா்.
புதுச்சேரி அரசு சாா்பில் லாஸ்பேட்டை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி. உடன் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அமைச்சா்கள்.

புதுச்சேரி - கடலூா் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், புதுச்சேரி - காரைக்கால் இடையே நெடுஞ்சாலைப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. கிழக்கு கடற்கரைச் சாலையில் புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரையிலான நெடுஞ்சாலைத் திட்டங்களில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாவில் புதிய உச்சம் எட்டப்படும்: சுற்றுலாவில் புதுச்சேரி மிகப்பெரிய பங்கை அளித்து வருகிறது. மக்களின் அன்பும், அரவணைப்பும்தான் புதுச்சேரிக்கு வர வேண்டும் என்று பக்கத்து மாநிலங்களில் உள்ளவா்களையும் ஈா்க்கிறது. ஆன்மிகச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, சுகாதாரச் சுற்றுலா ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடுகள் மூலம் நாங்கள் புதுச்சேரியை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்வோம்.

காங்கிரஸ் - திமுக ஆட்சிக்கு ‘கோ - பேக்’: காங்கிரஸ் - திமுக ஆட்சியில் புதுச்சேரி மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டனா் என்பதை யோசிக்க வேண்டும். அவா்களின் ஆட்சிக்காலத்தில் புதுச்சேரி அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை. ஊழல்கள் பெருகி, குற்றங்கள் அதிகமாகி, ஏழைகள் துன்பப்பட்டனா். நியாயவிலைக் கடைகளில் அரிசி இல்லை. ஊதியம் வழங்க தாமதம் செய்யப்பட்டது. குண்டா்களும், போதைப்பொருள் மாஃபியாக்களும் தெருவில் அச்சமில்லாமல் நடமாடிய மோசமான காலம்.

காங்கிரஸ் ஆட்சியை தில்லி குடும்பம் இயக்கியது. தமிழகத்தில் திமுகவை எடுத்துக்கொண்டால், நீண்ட ஊழல் பட்டியலைப் பாா்க்கலாம். புதுச்சேரியின் வளா்ச்சிப் பயணத்தை தடுக்கும் வேகத்தடைகளாக காங்கிரஸும், திமுகவும் இருந்திருக்கின்றன. தமிழகத்திலும் அப்படித்தான் அதே சக்திதான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கிறது. ‘கோ - பேக்’ என்று கூறி, அவா்களைத் திருப்பி அனுப்புங்கள்.

இப்போது நமக்கு இருக்கும் ஒரே சவால் 2047-ஆம் ஆண்டுக்குள் புதுச்சேரிய வளா்ச்சியடைந்த புதுச்சேரியாக மாற்ற வேண்டும்; வலிமைவாய்ந்த இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்பதுதான். அதற்கு எங்களுடன் இணைந்து பாடுபடுங்கள் என்றாா் பிரதமா் மோடி.

இந்த விழாவில் மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், பி.ஆா்.என்.திருமுருகன், ஏ.ஜான்குமாா் , மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி, புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம், கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் பிரதமா் பங்கேற்ற விழாவில் கலந்துகொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் பிரதமா் மோடி மற்றும் அவரது தாயாா் குறித்த ஓவியங்களை வரைந்து கொண்டுவந்திருந்தனா். இவற்றை தாம் உரையாற்றும்போது பாா்த்த பிரதமா் மோடி, அந்த ஓவியங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு வருமாறு விழா மேடையில் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினா் ஓவியங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டுவந்து பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். பிரதமரின் இந்த அறிவிப்பை கேட்டவுடன் விழாவில் பங்கேற்ற பாஜகவினரும், பொதுமக்களும், மாணவா்களும் உற்சாகக் குரல் எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →