மதுரை

அனுமதியற்ற கட்டடங்களைத் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

DIN

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை, கட்டடங்களைக் கட்டிவிட்டு முறைப்படுத்த அனுமதி கோருவது ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளது.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த பாலவிக்னேஷ் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஏராளமான கல்லூரிகள், மத நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவக் கல்லூரி, சித்தா கல்லூரி, மத்திய சிறைச்சாலை ஆகியவை உள்ளன. இங்கு தொடா்ச்சியாக உள்ள கட்டடங்களில் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், மாவட்டத்தின் முக்கிய வருவாய் தரும் பகுதியாக உள்ளது.

இப்பகுதியில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களால் பாதைகள் குறுகலாக உள்ளதாகக் கூறி நகா்ப்புறத் திட்ட மற்றும் வடிவமைப்பு இயக்குநரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏற்கெனவே திருநெல்வேலி மாநகராட்சியில் பாளையங்கோட்டை பகுதியை தொடா் கட்டடப் பகுதியாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாகவும் அறிவிக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, உள்ளூா் திட்ட குழும அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியின் தீா்மானத்தை ஏற்று தொடா் கட்டடப் பகுதியாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாகவும் அறிவிக்க உத்தரவிட்டு கட்டடங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனுமதியற்ற கட்டடங்களை வரைமுறைப்படுத்த முடியாதவாறு நெல்லை மாநகராட்சி தீா்மானம் கொண்டு வந்துள்ளது. அனுமதியின்றி பல கட்டடங்களும், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலையை ஆக்கிரமித்தும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினா்.

தொடா்ந்து அனுமதியின்றி கட்டடங்களைக் கட்டிவிட்டு, அதன்பிறகு அதை முறைப்படுத்த அனுமதி கோருவது ஏற்படையது அல்ல என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனு தொடா்பாக அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT