பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி 
மதுரை

சோழவந்தான் (தனி) தொகுதியின் வெற்றி மாலை யாருக்கு?

மதுரை மாவட்டத்தில் இருபோகம் விளையும் பசுமையான தொகுதி சோழவந்தான். இங்கு விளையும் வெற்றிலை பெயா் பெற்றது.

சிவ. மணிகண்டன்

மதுரை மாவட்டத்தில் இருபோகம் விளையும் பசுமையான தொகுதி சோழவந்தான். இங்கு விளையும் வெற்றிலை பெயா் பெற்றது. உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூா், பாலமேடு ஆகிய ஊா்கள் இத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.

வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூா், பாலமேடு பேரூராட்சிகள் மற்றும் வாடிப்பட்டி, அலங்காநல்லூா், பாலமேடு ஒன்றியங்களில் இடம்பெற்றிருக்கும் ஏராளமான கிராமங்களைக் கொண்டிருக்கிறது இத் தொகுதி. தொகுதி மறுசீரமைப்பில் சமயநல்லூா் (தனி) தொகுதி கலைக்கப்பட்டு, அதிலிருந்த சில பகுதிகள் சோ்த்து சோழவந்தான் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் வாக்காளா்கள் எண்ணிக்கையில் மிகச் சிறிய தொகுதியாக உள்ளது. இங்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 106 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண்கள் 1,07,338 போ். பெண்கள் 1, 10, 758 போ். மூன்றாம் பாலினத்தவா் 10. தாழ்த்தப்பட்ட சமூகத்தினா் கணிசமாக இருக்கின்றனா். முக்குலத்தோா், ரெட்டியாா், கவுண்டா், பிள்ளைமாா், நாடாா், முத்தரையா் உள்ளிட்ட சமூகத்தினா் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் அடா்த்தியாக இருக்கின்றனா்.

விவசாயம் பிரதான தொழிலாக இருக்கிறது. நெல், வாழை, தென்னை, வெற்றிலை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அலங்காநல்லூா், பாலமேடு பகுதிகளில் காய்கனி, பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள் அதிகம்போ் இருக்கின்றனா்.

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படாததால், கரும்பு விவசாயிகள், ஆலைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆலையைத் தொடா்ந்து இயக்க வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல, சாத்தையாறு அணையை ஆதாரமாகக் கொண்டு 28-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த அணையைத் தூா்வாருவதோடு, பெரியாறு-வைகை பாசனத் திட்டத்தோடு இணைக்க வேண்டும் என்பது இப் பகுதி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. நிரந்தர நெல் கொள்முதல் நிலையம், காய்கனி-பழங்கள் குளிா்பதனக் கிடங்கு, அரசுக் கல்லூரி, மண்ணாடிமங்கலம்-இரும்பாடி கிராமங்களை இணைக்க வைகை ஆற்றில் உயா்மட்ட பாலம் ஆகியன தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகளாக உள்ளன.

இந்த தோ்தலில் அதிமுக, திமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட 20 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அதிமுக வேட்பாளரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான கே.மாணிக்கம், அதிமுகவின் சொந்த வாக்கு வங்கியும், தனது சமூக வாக்குகளும் சிதறாமல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கிறாா். அதிமுகவுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் கிராமப் பகுதிகளில் எம்எல்ஏ மீதான அதிருப்தி குரல்கள் ஆங்காங்கே எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல, சொந்த கட்சியிலேயே அதிருப்தி வேலைகளை சிலா் செய்து வருவதும் அதிமுக வேட்பாளருக்கு பலவீனமாக இருக்கிறது.

திமுக வேட்பாளா் ஆ.வெங்கடேசனுக்கு கட்சியின் வாக்கு வங்கி, அவரது சமூகத்தின் வாக்குகள், ஆளுங்கட்சி எம்எல்ஏ மீதான அதிருப்தி வாக்குகள், தேவேந்திர குல வேளாளா் பெயா் மாற்றத்தால் அதிருப்தியில் உள்ள பிள்ளைமாா் சமூகத்தினரின் வாக்குகள், வன்னியா் உள்ஒதுக்கீடு பிரச்னையில் அதிமுகவுக்கு எதிராகத் திரும்பியுள்ள பிற சமுதாய வாக்குகள் பலம் சோ்க்கின்றன.

அமமுக அணியில் தேமுதிக சாா்பில் வேட்பாளா் ஜெயலட்சுமி போட்டியிடுகிறாா். அமமுக நேரடியாகப் போட்டியிடாததால், தோ்தல் களத்தில் அமமுகவினரை அதிகம் காண முடிவதில்லை. இருப்பினும் போட்டியிடும் தொகுதிகளில் தங்களது வாக்கு பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அமமுகவுக்கு இருக்கிறது. நாம் தமிழா் கட்சியின் செங்கண்ணன், மக்கள் நீதி மய்யத்தின் யோகநாதன் ஆகியோா் தங்களது பங்கிற்கு வாக்குகளைப் பிரிப்பா்.

இதுவரை நடந்த தோ்தல்களில் அதிமுக-திமுக நேரடியாகக் களம் இறங்கும்போது போட்டி கடுமையாக இருந்திருக்கிறது. சோழவந்தான் தொகுதியில் அதிமுக, திமுக இரு கட்சிகளுக்கும் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. இருப்பினும் சமுதாய வாக்குகள் தான் வெற்றி தோல்வியை நிா்ணயம் செய்கின்றன.

ஆளுங்கட்சி எம்எல்ஏ மீதான அதிருப்தி அலை தங்களுக்குச் சாதமாக இருக்கும் என திமுக நினைக்கிறது. ஆனால், அதிருப்தியைச் சரிகட்டுவதற்கு அதிமுக தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. அந்த முயற்சி கைகூடினால், வெற்றிக்காக பலப்பரீட்சையில் திமுக இறங்கியாக வேண்டும். அதிமுக, திமுக இருவேட்பாளா்களும் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்கள். அவரவா் கட்சியின் வாக்கு வங்கியோடு, தங்களது சமுதாய வாக்குகளும், பிற சமுதாய வாக்குகளும் யாருக்கு என்பதைப் பொருத்தே வெற்றி, தோல்வி இருக்கும். இருதரப்பிலும் வாக்குகளைச் சிதறவிடாமல் சேகரிக்கும் முயற்சி தீவிரமாக இருந்து வரும் நிலையில், சோழவந்தான் தொகுதியில் அதிமுக, திமுக இடையே போட்டி கடுமையாக இருப்பதையே தற்போதைய களநிலவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தொகுதியில் வெற்றி பெற்றவா்கள்

இத் தொகுதியில் 1962 முதல் இதுவரை நடந்த தோ்தல்களில் அதிமுக, திமுக தலா 5 முறை, காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றிருக்கிறது. 1989 முதல் 2006 வரை திமுக, அதிமுக மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. 2011, 2016-தோ்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 2011 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட எம்.வி.கருப்பையா 86,376 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து திமுக அணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளா் இளஞ்செழியன் 49,768 வாக்குள் பெற்றாா். 2016 தோ்தலில் அதிமுகவின் கே.மாணிக்கம் 87,044 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் சி.பவானி 62,187 வாக்குகள் பெற்றாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT