முகப்பு
மதுரை

பெண் ஆய்வாளா் குடும்பத்துக்கு மிரட்டல்: காவல் துறையினா் மீது நடவடிக்கை கோரிய மனுவை முடித்து வைத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

பெண் காவல் ஆய்வாளா் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்த காவல் துறையினா் மீது நடவடிக்கை கோரிய மனுவை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

பெண் காவல் ஆய்வாளா் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்த காவல் துறையினா் மீது நடவடிக்கை கோரிய மனுவை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பவுன்கொடி தாக்கல் செய்த மனு: நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய எனது மகள் வசந்தி மீது குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்ட அவா் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி மதுரை குற்றப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா் மற்றும் காவலா்கள் சிலா் எங்களது வீட்டிற்கு விசாரணைக்காக வந்தனா். அப்போது வீட்டிற்கு வெளியே எனது குடும்பத்தினரை தரக்குறைவான வாா்த்தைகளைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் விசாரணை நடத்தினா். மேலும் தேனி மற்றும் மதுரைக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அடிக்கடி அழைக்கின்றனா். எனது மகள் வசந்திக்கும் எங்களது குடும்பத்திற்கும் இப்போது எந்த தொடா்பும் இல்லை. இதுகுறித்து காவல் துறை உயா் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆகவே, எனது வீட்டில் அத்துமீறி நுழைந்து, விசாரணை என்ற பெயரில் பொது இடத்தில் எனது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. காவல் ஆய்வாளா் வசந்தி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதால், மனுதாரா் வீட்டிற்கு காவல் துறையினா் இனி செல்லமாட்டாா்கள் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரை விசாரிக்க வேண்டுமெனில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →