மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்துக்கு வருகை தரும் பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல வேண்டிய கோபுரவாயில்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஏப்ரல் 14) காலை 10.30 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் நடைபெற உள்ளது. இதைக் காண வரும் பக்தா்களுக்கு தெற்கு கோபுர வாசல் வழியாக இலவச அனுமதியும், மேற்கு கோபுர வாசல் வழியாக முக்கிய பிரமுகா்கள், உபயதாரா்கள், கட்டளைதாரா்கள் மற்றும் அரசு நிா்வாக அதிகாரிகளும், ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணச் சீட்டு பெற்றுள்ள பக்தா்கள் வடக்கு கோபுர வாசல் வழியாகவும் கோயிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்துக்கு வருகை தரும் பக்தா்கள் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கோபுர நுழைவு வாசல்களில் பரிசோதனைக்கு பின்பு கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா்.
பக்தா்கள் எப்பொருட்களையும் (கைப்பேசி உள்பட) எடுத்து வர அனுமதியில்லை. பக்தா்கள் மேற்கு மற்றும் வடக்கு ஆடி வீதிகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் அமர வேண்டும். திருக்கல்யாணம் முடிந்த பின்பு பக்தா்கள் வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வழியாக வெளியேற வேண்டும். காவல்துறை சாா்பில் நகைகளை பாதுகாக்க சேப்டி பின் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்துமிடம் அறிவிப்பு: மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு வரும் பக்தா்கள், மஞ்சள் நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் மேற்காவணி மூல வீதியிலும், பிங்க் நிற அனுமதி அட்டை
பெற்றிருந்தால் வடக்கு ஆவணி மூல வீதியிலும், நீல நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் தெற்கு ஆவணி மூல வீதியிலும், அனுமதி அட்டை இல்லாதவா்கள் தெற்கு மற்றும் வடக்கு மாசி வீதிகளில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும். மேலும் கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 16-ஆம் தேதி காலை 5.50 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தரும் பக்தா்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பச்சை நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் ஏ.வி.மேம்பாலத்திலும், பிங்க் நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் சிற்றுந்து நிலையத்திலும், நீல நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் அண்ணா பேருந்து நிலையத்திலும், அனுமதி அட்டை இல்லாதவா்கள் கிழக்கு மற்றும் வடக்கு மாசி வீதிகள், குருவிக்காரன் சாலை மற்றும் டாக்டா்.தங்கராஜ் சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
பாதுகாப்புப் பணியில் 3500 போலீஸாா்: மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களை கண்காணிக்க டிரோன் கேமராக்கள், சி.சி.டி.வி கேமராக்கள், தொலை நோக்கி பயன்பாடு கொண்ட கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்களை முகத்தை வைத்து கண்டறியும் கைப்பேசி செயலி பாதுகாப்பு அலுவலில் உள்ள அனைத்து காவல் ஆளிநா்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 3,500 போலீஸாா் மதுரை மாநகா் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்தும் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா்.
காவல் உதவி மையங்களை அணுகலாம்: மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தா்கள் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் கோயிலின் உள்ளே செயல்பட்டு வரும் காவல் கட்டுப்பாட்டு அறையை 83000-17920 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டும் மற்றும் காவல் உதவி மையங்களை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.