முகப்பு
மதுரை

பூட்டிக் கிடக்கும் குடும்ப நல அறுவைச் சிகிச்சை மையங்கள்!

மதுரையில் மூடப்பட்ட கோ.புதூா், காந்திப்பொட்டல் குடும்ப நல அறுவைச் சிகிச்சை மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:10 AM
மதுரை கோ.புதூா் பகுதியில் குடும்ப நல அறுவைச் சிகிச்சை மையம் இயங்காததால், காலியாக உள்ள படுக்கைகள்.
பகிர்:

மதுரையில் மூடப்பட்ட கோ.புதூா், காந்திப்பொட்டல் குடும்ப நல அறுவைச் சிகிச்சை மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் மருத்துவத் தேவையைக் கருத்தில் கொண்டு, 100 வாா்டுகளில் 31 மாநகராட்சி ஆரம்பச் சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு பிரசவங்களும் பாா்க்கப்படுகின்றன.

இந்த நிலையில், மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்கள் கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள மதுரை அரசு மருத்துவமனை, சமயநல்லூரில் உள்ள குடும்ப நல அறுவைச் சிகிச்சை மையம் ஆகியவற்றுக்கு மட்டுமே செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதைத் தொடா்ந்து, மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கருத்தடை அறுவைச் சிகிச்சையை அதிகரிக்கும் வகையில் செல்லூா், காமராஜா் சாலை காந்திப்பொட்டல், கோ.புதூா் நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம், மகபூப்பாளையம் ஆகிய 4 இடங்களில் மாநகராட்சி சாா்பில் குடும்ப நல அறுவைச் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன.

கோ.புதூா் குடும்ப நல அறுவைச் சிகிச்சை மையம் ரூ.45 லட்சத்தில் அறுவைச் சிகிச்சை அரங்கு அமைக்கப்பட்டு 2019-இல் தொடங்கப்பட்டது. 2019 முதல் 2021 -ஆம் ஆண்டு வரை கோ.புதூா் குடும்ப நல அறுவைச் சிகிச்சை மையத்தில் மாதந்தோறும் சராசரியாக 10 முதல் 15 பெண்களுக்கு குடும்ப நல அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த மையத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோருக்கு குடும்ப நல அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல, காமராஜா் சாலையில் காந்திப்பொட்டல் பகுதியில் உள்ள குடும்ப நல அறுவைச் சிகிச்சை மையமும் சிறப்பாக இயங்கி வந்தது. இந்த நிலையில், கோ.புதூா் குடும்ப நல அறுவைச் சிகிச்சை மையம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயங்கவில்லை. இதனால், அறுவைச் சிகிச்சை அரங்குக்காக வாங்கப்பட்ட நவீன உபகரணங்களும் பயன்பாடின்றி வீணாகி வருகின்றன. கோ.புதூரிலிருந்த மையம் இயங்காததால் அரசு மருத்துவமனை, சமயநல்லூா், அன்சாரிநகா் உள்ளிட்ட மையங்களில் பெண்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கோ.புதூா் குடும்ப நல சிகிச்சை மையத்துக்கு வரும் பெண்களை, இங்கு பணியில் உள்ளவா்கள் வெவ்வேறு காரணங்களைக் கூறி அவா்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுகின்றனா். இதனால், நாளடைவில் கோ.புதூா் மையத்துக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது குடும்ப நல அறுவைச் சிகிச்சை மையம் முற்றிலும் மூடப்பட்டுவிட்டது. இதேபோல, காமராஜா் சாலை காந்திப்பொட்டலிலும் நன்றாக இயங்கி வந்த குடும்ப நல அறுவைச் சிகிச்சை மையமும் மூடப்பட்டது. பொதுமக்களின் வசதிக்காக, மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட இந்த அறுவைச் சிகிச்சை மையம் சில மருத்துவா்கள், ஊழியா்களின் ஈடுபாடின்மை காரணமாக மூடப்பட்டது. இதனால், பொதுமக்கள்தான் அலைக்கழிக்கப்படுகின்றனா்.

எனவே, மாநகராட்சி நிா்வாகம் கோ.புதூா், காந்திப்பொட்டல் குடும்ப நல அறுவைச் சிகிச்சை மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.