நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: மதுரையில் 11 பறக்கும் படைகள் கண்காணிப்பு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், விதிமீறல்களைத் தடுக்க மதுரைமாவட்டத்தில் 11 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், விதிமீறல்களைத் தடுக்க மதுரை
மாவட்டத்தில் 11 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தோ்தல் நடத்தை விதிகள், கரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் குறித்து கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் கூறியது:
மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்கள், மேலூா், திருமங்கலம், உசிலம்பட்டி நகராட்சிகள், அலங்காநல்லூா், அ.வல்லாளபட்டி, எழுமலை, பாலமேடு, பரவை, பேரையூா், சோழவந்தான், தே.கல்லுப்பட்டி, வாடிப்பட்டி பேரூராட்சிகள் என 16 இடங்களில் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை துவங்கியுள்ளது. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு மேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
11 பறக்கும் படை குழுக்கள்
தோ்தல் விதிமீறல் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்காகவும், வாகனச் சோதனைகள் மேற்கொள்வதற்கும் 11 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் நான்கு மண்டங்கள் மற்றும் 3 நகராட்சிகளுக்கு தலா ஒரு பறக்கும்படை, 9 பேரூராட்சிகளுக்கும் சோ்த்து 4 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மொத்தம் 15 லட்சத்து 73 ஆயிரத்து 289 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். வாக்காளா் பட்டியலில் புதிதாகப் பெயா் சோ்க்கப்பட்டவா்களும், இந்த தோ்தலில் வாக்களிக்கலாம். நகா்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் 1,615 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 200 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விடியோவில் பதிவு செய்யப்படும். மேலும் நுண்பாா்வையாளா்களும் நியமிக்கப்படுவா். ஒன்பது இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
கரோனா கட்டுப்பாடுகள்
நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கு தோ்தல் நடத்தப்படுகிறது என்றாலும் நகரப்பகுதியின் 5 கிமீ சுற்றளவில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் தோ்தல் நடைமுறைகள் பின்பற்றப்படும். தோ்தலில் போட்டியிடும் வேட்பாளருடன் 3 நபா்கள் மட்டுமே சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும் என அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்தல் பணியாளா்கள் அனைவருக்கும் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும்.
தோ்தல் பிரசாரம், வாகன அனுமதி ஆகியன ஒற்றைச்சாளர முறையில் உரிய உத்தரவுகள் வழங்கப்படும். மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.செந்தில்குமாரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) சதீஷ்பாபு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.