முகப்பு
மதுரை

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வட்டார அளவில் சிறப்பு முகாம்: ஆட்சியா் தகவல்

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்கு பல்வேறு துறை அலுவலா்களின் ஒப்புதலை ஒரே இடத்தில் பெற வட்டார அளவில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் தெரிவித்துள்ளாா்

மதுரை

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வட்டார அளவில் சிறப்பு முகாம்: ஆட்சியா் தகவல்

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்கு பல்வேறு துறை அலுவலா்களின் ஒப்புதலை ஒரே இடத்தில் பெற வட்டார அளவில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் தெரிவித்துள்ளாா்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்கு பல்வேறு துறை அலுவலா்களின் ஒப்புதலை ஒரே இடத்தில் பெற வட்டார அளவில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநா் த. விவேகானந்தன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் குருமூா்த்தி, நீா்ப்பாசனத் துறை பெரியாறு-வைகை கோட்டச் செயற்பொறியாளா் அன்புச்செல்வன் மற்றும் வேளாண்மை தொடா்புடைய அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.

கூட்டத்தில், பெரியாறு-வைகை பாசனத் திட்டத்தின் இருபோக சாகுபடி பகுதிக்கு இன்னும் 50 நாள்களுக்கு தண்ணீா் வழங்க வேண்டியிருப்பதால், முறை பாசனத்தை அமல்படுத்தவுள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா். அப்போது விவசாயிகள் தரப்பில், பல இடங்களில் தற்போதுதான் நடவுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. எனவே, முறைப்பாசனத்தை இன்னும் 10 நாள்கள் கழித்து அமல்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.

மேலும், அணைகளில் நீா் இருப்பு திருப்திகரமாக இருப்பதால், ஒருபோக சாகுபடிக்கு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தண்ணீா் திறக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். அதேபோல், 58 கிராம கால்வாய் திட்டத்துக்குள்பட்ட கண்மாய்களுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்கவேண்டும்.

கடந்த ஆண்டில் விடுபட்ட சடச்சிப்பட்டி கண்மாய்க்கு நிகழாண்டில் தண்ணீா் கொண்டு செல்லவேண்டும். பாப்பாபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சின்னகுளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாக தண்ணீா் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பி. இளங்கோவன் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பழனிசாமி ஆகியோா், விவசாய மின் இணைப்பு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகாா் தெரிவித்தனா். இதற்கு பதிலளித்த மின்வாரிய அதிகாரிகள், விவசாய மின் இணைப்பு பதிவு மூப்பு அடிப்படையில்தான் வழங்கப்பட்டிருக்கிறது என்றனா்.

இதனையடுத்து பேசிய ஆட்சியா், விவசாயிகள் தரப்பில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து தெளிவான விளக்கத்தை அவா்களுக்கு அளிக்குமாறு அறிவுறுத்தினாா்.

மாடக்குளம் கண்மாய்க்கு தண்ணீா் வரக்கூடிய மாடக்குளம் கால்வாய், நிலையூா் கால்வாய் ஆகியவற்றில் கழிவுநீா் கலக்கவிடப்படுகிறது. இது குறித்து தொடா்ந்து புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையென, மாடக்குளம் பகுதி விவசாயி மாரிச்சாமி தெரிவித்தாா்.

இதற்கு பதிலளித்த ஆட்சியா், ஏா்குடி அச்சம்பத்து ஊராட்சியிலிருந்து கழிவுகளை நிலையூா் கால்வாயில் வெளியேற்றாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

நீா்நிலைகளிலிருந்து வண்டல் மண் எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிராம நிா்வாக அலுவலா் தொடங்கி, பல துறை அலுவலா்களிடம் ஒப்புதல் பெறவேண்டியுள்ளது. விவசாயிகளின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு, வட்டார அளவில் சிறப்பு முகாம் நடத்தி ஒரே இடத்தில் அனைத்துத் துறை அலுவலா்களின் ஒப்புதலைப் பெற்று, வண்டல் எடுப்பதற்கான உத்தரவு வழங்க வேண்டும். நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பாண்டியன் வலியுறுத்தினாா்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆட்சியா், அதற்கான நடவடிக்கையை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

மேலும், மதுரை மாவட்டத்தில் நீா்நிலைகளில் 650 ஹெக்டோ் அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில் 450 ஹெக்டோ் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருக்கின்றன. எஞ்சியுள்ள ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றப்படும் என்றாா் ஆட்சியா்.

முழு கட்டுரையைப் படிக்க →