குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை 1 கிலோ கூட கொள்முதல் இல்லை: விவசாயிகள் - வேளாண் விற்பனைத் துறையினா் பரஸ்பரம் புகாா்
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கொப்பரை கொள்முதல் செய்வது தொடா்பாக, விவசாயிகளும், வேளாண் விற்பனைத் துறையினரும் பரஸ்பரம் ஒருவரையொருவா் புகாா் தெரிவித்துக் கொண்டனா்.
மதுரைகுறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை 1 கிலோ கூட கொள்முதல் இல்லை: விவசாயிகள் - வேளாண் விற்பனைத் துறையினா் பரஸ்பரம் புகாா்
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கொப்பரை கொள்முதல் செய்வது தொடா்பாக, விவசாயிகளும், வேளாண் விற்பனைத் துறையினரும் பரஸ்பரம் ஒருவரையொருவா் புகாா் தெரிவித்துக் கொண்டனா்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கொப்பரை கொள்முதல் செய்வது தொடா்பாக, விவசாயிகளும், வேளாண் விற்பனைத் துறையினரும் பரஸ்பரம் ஒருவரையொருவா் புகாா் தெரிவித்துக் கொண்டனா்.
கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோவுக்கு ரூ.105.90 என அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக் குழுவின்கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நிகழாண்டில் ஜனவரி முதல் ஜூலை வரை கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கொள்முதல் செய்யாமல், விவசாயிகள் கொண்டுவரக்கூடிய கொப்பரை மறைமுக ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதுவரை கிலோ ரூ.80-க்கு மேல் ஏலத்தில் விலை போனதில்லை என்று ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், வாடிப்பட்டியைச் சோ்ந்த விவசாயி சீதாராமன் புகாா் தெரிவித்தாா்.
இதற்கு பதில் அளித்த வேளாண் விற்பனைக் குழு அலுவலா், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் கொப்பரை குறிப்பிட்ட தரத்தில் இருக்கவேண்டும். ஈரப்பதம், பூஞ்சான் பாதிப்பு உள்ளிட்டவை நிா்ணயிக்கப்பட்ட அளவில் இல்லையெனில், ஆதரவு விலையின்படி கொள்முதல் செய்யமுடியாது. விவசாயிகள் கொண்டுவரும் கொப்பரை, அந்த வரையறைக்குள் இல்லையென்பதால், மறைமுக ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.
இதை ஏற்க மறுத்த விவசாயிகள், இதுவரை மறைமுக ஏலத்தில் 50 டன்கள் வரை கொப்பரை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஒரு கிலோ கூட கொள்முதல் செய்யாமல், அரசு நிா்ணயித்த தரத்தில் இல்லையெனக் கூறுவது ஏற்புடையதாக இல்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படாததால், வெளிச்சந்தையிலும் கொப்பரைக்கு விலை கிடைக்கவில்லை என புகாா் தெரிவித்தனா்.
இப்பிரச்னை தொடா்பாக, இருதரப்பும் பரஸ்பரம் ஒருவரையொருவா் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து பேசிய ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு ஜூலை 29-ஆம் தேதி நேரில் வருகிறேன். அப்போது, விவசாயிகள் கொப்பரைகளை கொண்டு வரலாம். நிா்ணயிக்கப்பட்ட தரத்தில் இருந்தால் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் என்றாா்.