சிவகங்கையில் இளைஞரின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
சிவகங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடா்பிலிருந்த இளைஞரின் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
சிவகங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடா்பிலிருந்த இளைஞரின் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
சிவகங்கை கல்லூரிச் சாலைப் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் விக்னேஷ் (25). சென்னையில் தனியாா் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கைக்கு வந்தாா். இந்நிலையில், அவருக்கு தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடா்பு இருப்பதாகவும், இலங்கைக்குச் சென்று பயிற்சிப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, சிவகங்கை கல்லூரிச் சாலைப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் மூவா் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சிவகங்கை நகா் போலீஸாா், வருவாய்த் துறை அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.
அதிகாலை 5 மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனை காலை 7 மணி வரை நீடித்தது. சோதனையின் முடிவில் அங்கிருந்து சில புத்தகங்கள், ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனா்.