கப்பலூா் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதில் விலக்கு கோரிய மனு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை கப்பலூா் சுங்கச்சாவடிக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரைகப்பலூா் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதில் விலக்கு கோரிய மனு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை கப்பலூா் சுங்கச்சாவடிக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
500 மீட்டா் தொலைவு மட்டும் 4 வழிச் சாலையை பயன்படுத்தி நிறுவனத்துக்கு சரக்குகள் ஏற்றி வரும் வாடகை லாரிகளுக்கு, மதுரை கப்பலூா் சுங்கச்சாவடிக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தனியாா் மாவு மில் நிா்வாக இயக்குநா் மோகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை திருமங்கலம் பகுதியில் மாவு மில் அமைந்துள்ளது. இதற்கான பொருள்கள் பிற மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, எங்களது சொந்த லாரிகள் மற்றும் வாடகை லாரிகள் மூலம் திருமங்கலத்தில் உள்ள மாவு மில்லுக்கு எடுத்து வரப்படுகின்றன. மதுரை, திருமங்கலம் கப்பலூா் 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. கூடல்நகா் பகுதியில் இருந்து எங்களது நிறுவனத்துக்கு கொண்டுவரப்படும் பொருள்கள் கப்பலூா் சுங்கச்சாவடியைக் கடந்து வர வேண்டி உள்ளது.
4 வழிச்சாலையில் எங்களது வாகனம் 500 மீட்டா் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதற்காக சுங்கச்சாவடியில் பெருந்தொகை எங்களிடம் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இதற்காக மாதந்தோறும் மிகப்பெரிய தொகை சுங்கச்சாவடிக்கு செலுத்த வேண்டியுள்ளது. எனவே, எங்களது நிறுவனத்திற்கு பொருள்கள் எடுத்து வரும் வாடகை வாகனத்துக்கு கப்பலூா் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு நீதிபதி ஆா்.விஜயகுமாா் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. மேலும் மனுதாரா் கோரும் நிவாரணம் வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.