முகப்பு
மதுரை

பள்ளி புத்தகத்தில் திருக்குறளை நடைமுறைப்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

திருக்குறளின் 108 அதிகாரங்களை பள்ளி புத்தகத்தில் நடைமுறைப்படுத்துவது தொடா்பாக ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த உயா்நீதி மன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:05 AM
பகிர்:

திருக்குறளின் 108 அதிகாரங்களை பள்ளி புத்தகத்தில் நடைமுறைப்படுத்துவது தொடா்பாக ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த உயா்நீதி மன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ராம்குமாா் தாக்கல் செய்த பொது நல மனு:

கடந்த 2016- இல் உயா்நீதிமன்றம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால், பொருள்பால் அதிகாரங்களில் உள்ள 1,050 திருக்குறள்களை ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் முழுமையாக பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 2017-இல் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், திருக்குறளில் உள்ள அறத்துப்பால், பொருள்பாலின் 108 அதிகாரங்களில் உள்ள 1,050 திருக்குறள்களை ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டத்தில் சோ்க்க அரசாணை வெளியிட்டது.

ஆனால், பள்ளிகளில் பெயரளவில் மட்டுமே திருக்குறள் கற்பிக்கப்படுகிறது. அதேபோல், பாடத்திட்டத்தில் திருக்குறள் மட்டுமே உள்ளது. அதன் பொருள் விளக்கப்பட வில்லை. மாணவா்கள் தோ்வு எழுதும் போது, திருக்குறள் பெயரளவில் மட்டுமே இடம் பெறுகிறது.

திருக்குறளை ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடத்திட்டத்தில் பொருள் விளக்கத்துடன் சோ்க்கக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடத்திட்டத்தில் திருக்குறளின் அறத்துப்பால், பொருள்பால் ஆகியவற்றில் 108 அதிகாரங்களில் உள்ள 1,050 திருக்குறள்களை பொருளுடன் இடம் பெறச் செய்வதுடன், தோ்விலும் திருக்குறள் தொடா்பான கேள்விகள் இடம் பெற உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தாா்.

விசாரணையின் முடிவில் நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இது தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் திருக்குறளை பாடத்திட்டத்தில் சோ்ப்பது குறித்த அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்தி, அது தொடா்பான அறிக்கையை மூன்று மாதங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.