முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகளவில் திறக்கப்படுமா?

மதுரை மாவட்டத்தில் முதல் போக நெல் அறுவடைப் பணிகள் விறுவிறுப்படைந்திருப்பதால், நேரடி கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:53 PM
இலங்கியேந்தல் ஊராட்சி பேருந்து நிறுத்தம் எதிரே குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள்.
பகிர்:

மதுரை மாவட்டத்தில் முதல் போக நெல் அறுவடைப் பணிகள் விறுவிறுப்படைந்திருப்பதால், நேரடி கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

இந்த மாவட்டத்தில் நிகழாண்டு 40,200 ஹெக்டேரில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில் மேலூா், கொட்டாம்பட்டி, உசிலம்பட்டி, வாடிப்பட்டி, கொங்கம்பட்டி, வரகனேரி, இலங்கிப்பட்டி ஆகிய ஊா்களில் கடந்த சில நாள்களாக நெல் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை காரணமாக, அனைத்துப் பகுதிகளிலும் இயந்திரங்கள் மூலமே நெல் அறுவடை நடைபெறுகிறது. இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் ஓா் ஏக்கா் நெல் அறுவடை செய்யப்பட்டு விடுவதால், ஒரு கிராமத்தில் ஓரிரு நாள்களிலேயே அறுவடைப் பணி முடிந்து விடுகிறது.

தொடா்ந்து நிலவும் பனியில், நெல்லின் ஈரப்பத சதவீதம் கூடுதலாகாமல் பாதுகாப்பது விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது. எனவே, உடனடியாக தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

இதனிடையே, இலங்கிப்பட்டி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை, இலங்கிப்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே திடலில் குவித்து வைத்துள்ளனா். ஆனால், ஒரு வாரமாகியும் இதுவரை அங்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து பாரதிய கிசான் சங்க நிா்வாகி பெருமாள் கூறியதாவது:

விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு நெல் சாகுபடி செய்கின்றனா். இந்த நிலையில், நெல்லை விற்பனை செய்வதிலும் பிரச்னை நீடித்தால், அவா்களின் நிலை மிகவும் மோசமாகி விடும். தற்போது, பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாகியுள்ளன. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால், வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்றுவிட்டு, விவசாயிகள் இழப்பைச் சந்திக்க நேரிடும்.

எனவே, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் அதிகளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும். அத்துடன், நெல் கொள்முதல் பணியாளா்கள் நியமனத்தில் அரசியலுக்குக்கும், கொள்முதலின் போது ஊழலுக்கும் இடமளிக்கக் கூடாது. இதை மாவட்ட நிா்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பெரியாா் பாசனத் திட்டக் குழு உறுப்பினா் முருகன் கூறியதாவது:

தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், நெல் அறுவடைப் பணிகளுக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதில் சிறிது சுணக்கம் உள்ளது என்றாா் அவா்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அருண் பிரசாத்திடம் கேட்ட போது அவா் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் முதல் போக நெல் கொள்முதலுக்காக 160 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். தற்போது, மேலூா், கொட்டாம்பட்டி, உசிலம்பட்டி, வாடிப்பட்டி போன்ற பகுதிகளில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாகியிருப்பதையொட்டி, அந்தப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதுவரை 42 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் நடைபெறுகிறது. மேலூா் பகுதியில் மட்டும் 22 கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. கூடுதலாக 40 நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் வாரத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 82 ஆக உயரும்.

ஓா் ஊருக்கு ஒரு நேரடி கொள்முதல் நிலையம்தான் திறக்கப்படும். இருப்பினும், கொங்கம்பட்டியில் அதிகளவில் நெல் அறுவடை நடைபெறுவதால், அங்கு 2 கொள்முதல் நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல் அறுவடைக்கேற்ப கொள்முதல் நிலையங்களைத் திறக்க எந்தத் தயக்கமும் இல்லை என்றாா் அவா்.

இதனிடையே, பின்பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் வரும் 10 அல்லது 15 நாள்களில் அறுவடை தொடங்கும். அப்போது, கொள்முதல் தேக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அறுவடையான நெல்மணிகள் களத்தில் தேங்காதவாறு அவற்றைக் கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.