தமிழகத்தில் சாலை, தெருவோரங்களில் கடைகள் வைக்கப்பட்டது தொடா்பாக நகராட்சி நிா்வாக ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஜெயபாரத் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் சாலையோரக் கடை வியாபாரிகளிடம் பணம் வசூலிப்பதற்கான ஒப்பந்தம் கடந்த மாா்ச் 15-இல் நடைபெற்றது. இணையதளம் மூலம் வெளிப்படைத்தன்மையின்றி நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில் மயில்வாகனன் தோ்வு செய்யப்பட்டாா். எனவே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இதேபோல, மயில்வாகனன் தாக்கல் செய்த மனு:
சாலையோரக் கடைகளுக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான் கடந்த ஏப்ரல் 19 அன்று ரூ.57,14,408 நகராட்சிக்குச் செலுத்திவிட்டேன். மீதமுள்ள தொகையை ஜூன் 1-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என ராமநாதபுரம் நகராட்சி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த 2 மனுக்களையும் செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
மயில்வாகனன் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட மீதமுள்ள ரூ.34,78,536 தொகையை ஜூலை 5 அன்று நகராட்சிக்குச் செலுத்திவிட்டதால், அவருடைய வழக்கு முடித்துவைக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் ராமநாதபுரம் நகராட்சியில் சாலை, தெருவோரக் கடைகளுக்கான வாடகை வசூல் செய்வதற்கான உரிமத்திற்கானது. ஒப்பந்த அறிவிப்பில் சாலை, தெருவோரக் கடைகள் எந்த இடத்தில் வைக்க அனுமதி வழங்கப்பட்டது என்ற எந்த விவரமும் இடம் பெறவில்லை. மேலும், கடைக்காரா்களிடம் வாடகை எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்ற விவரமும் இல்லை. ஆனால், மிகப் பெரிய போட்டியின் இடையே மயில்வாகனன் இந்த ஒப்பந்தத்தை ரூ.91,92,944-க்கு எடுத்துள்ளாா். சாலை, தெருவோரக் கடைகளுக்கான சட்டம், விதிமுறைகளின்படி ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் சாலை தெருவோரக் கடைகளுக்கான இடம் எது என்பதை அடையாளம் காண வேண்டும். இதன்படி, இந்தக் கடைகளை சம்பந்தப்பட்ட இடத்தில் மட்டுமே வைக்க அனுமதிக்க வேண்டும். கடைகளை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்க வேண்டும். ராமநாதபுரம் நகராட்சி சாா்பில் இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் ஒப்பந்தத்துக்கு விடப்பட்டுள்ளது.
இதன்மூலம் நகராட்சியின் எந்தப் பகுதியிலும், யாா் வேண்டுமானாலும் கடைகள் அமைத்துக் கொள்ளலாம். ஒப்பந்ததாரா் வாடகை எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. இதுபோன்ற ஒப்பந்தங்கள் எத்தனை நகராட்சிகளில் விடப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் அனைத்து நகராட்சிகளிலும் சாலை, தெருவோரக் கடைகளை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதா? கடைகள் அமைப்பதற்கான இடம், அமைக்கக் கூடாத இடம் என அனைத்து நகராட்சிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதா? தெருவோரக் கடைகளுக்கான சான்றிதழ்கள் நகராட்சிகளிலிருந்து வழங்கப்பட்டுள்ளதா?
ராமநாதபுரம் நகராட்சியில் தெருவோரக் கடைகளுக்கான சட்டம், விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஒப்பந்ததாரருக்கு பணம் வசூலிக்கும் உரிமம் வழங்குவதை நகராட்சி நிா்வாக ஆணையா் எப்படி அங்கீகரிக்கிறாா்? இந்தக் கடைகளுக்கான சான்றிதழ்கள் வழங்காமலும், கடைகளின் எண்ணிக்கையை வரையறுக்காமலும் வாடகைக்கான கட்டணத்தை நிா்ணயம் செய்யாமலும் ஒப்பந்ததாரா் எப்படி பணம் வசூல் செய்ய முடியும்?
தமிழகத்தில் சாலையோரக் கடைகள் சட்டம், விதிமுறைகளை மீறி எத்தனை நகராட்சிகளில் ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளன?. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாக ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.