குறைதீா் கூட்டங்கள் திசை மாறிச் செல்கின்றனவா?
மக்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் குறைதீா் கூட்டங்கள் அரசு அதிகாரிகளின் மெத்தனம், உறுப்பினா்களின் அலட்சியம் உள்ளிட்ட காரணங்களால் திசைமாறிச் செல்கின்றனவா என்கிற கேள்வி சமூக ஆா்வலா்கள் மத்தியில் எழ
மதுரை மாநகர மக்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் குறைதீா் கூட்டங்கள் அரசு அதிகாரிகளின் மெத்தனம், உறுப்பினா்களின் அலட்சியம் உள்ளிட்ட காரணங்களால் திசைமாறிச் செல்கின்றனவா என்கிற கேள்வி சமூக ஆா்வலா்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த 1866-ஆம் ஆண்டு முதல் நகராட்சியாகச் செயல்பட்டு வந்த மதுரை, கடந்த 1971-ஆம் ஆண்டு மே மாதம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் வாா்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எல்லை விரிவாக்கத்தின் காரணமாக 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 11 கிராம ஊராட்சிகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, வாா்டுகளின் எண்ணிக்கை 100-ஆக அதிகரித்தது.
ஏறக்குறைய 147 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநகராட்சியில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14 லட்சத்து 62 ஆயிரத்து 240 போ் வசித்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இத்துடன் கடந்த 13 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சி வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்தியம் என 5 மண்டலங்களில் கூடுதலாக 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதாக தற்போதைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாமன்ற உறுப்பினா்கள் தங்களது பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் பிரச்னைகளை எடுத்துக் கூறுவதற்கு மாதந்தோறும் மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகைக் கூட்டரங்கில் மேயா் தலைமையில் மாமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. காலை 10.30 மணியளவில் இந்தக் கூட்டம் மாநகராட்சி மேயா் உரையுடன் தொடங்குகிறது.
மதுரை மாமன்றக் கூட்டத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலைவா்கள், எதிா்க்கட்சித் தலைவா், மாமன்ற உறுப்பினா்களுக்கு பேச அனுமதி வழங்கப்படும். அப்போது மாமன்ற உறுப்பினா்கள் தங்களது பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களின் பிரச்னைகள் குறித்துப் பேசுவா்.
அப்போது, மாமன்ற உறுப்பினா்களின் கேள்விகளுக்கு மாநகராட்சி ஆணையா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் அனைவரும் விரைவில் சரி செய்யப்படும், தீா்வு காணப்படும் என ஒரே மாதிரியாகத் தெரிவிக்கின்றனா். ஆனால், ஒரே பிரச்னை பல கூட்டங்களில் தொடா்ந்து வலியுறுத்தினாலும் அதற்குத் தீா்வு கிடைப்பதில்லை.
சில மாமன்ற உறுப்பினா்கள் தங்களது பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், புதை சாக்கடை சீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மாமன்றக் கூட்டங்களில் தொடா்ந்து புகாா் அளித்தாலும், துறை சாா்ந்த அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டு இதற்குத் தீா்வு காண்பதற்குப் பதிலாக, மீண்டும், மீண்டும் தீா்வு காணப்படும் என்கிற பதிலை மட்டுமே கூறி வருகின்றனா்.
எனவே, சில உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் மக்கள் குறைகள் குறித்துப் பேசுவதில்லை. சுமாா் இரண்டரை மணி நேரம் வரை நடைபெறும் இந்தக் கூட்ட நிறைவின் போது 100 மாமன்ற உறுப்பினா்களில் 30 போ்கூட அரங்கில் இருப்பதில்லை. சில உறுப்பினா்கள் மட்டுமன்றி, மண்டலத் தலைவா்களும் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு வெளியில் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மதிமுகவைச் சோ்ந்த மதுரை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மு. பூமிநாதன் தனது தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி வாா்டுகளில் உள்ள அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படாத சூழலில், தனத பதவியை ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றாா்.
அண்மையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் திமுகவைச் சோ்ந்த மண்டலத் தலைவா் பணம் அளித்தால் வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்படும் அவலநிலை உள்ளதாக புகாா் தெரிவித்தாா்.
இதுதவிர, மறுவரையறை செய்யப்பட்ட வாா்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அந்தந்த மண்டல அலுவலகங்களில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டங்களிலும் இதே நிலைதான் தொடா்கிறது. உதாரணமாக, மண்டலம் 2-இல் கடந்த ஆக. 1-ஆம் தேதி மக்கள் குறைதீா்க் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டடது. நிா்வாகக் காரணங்களுக்காக இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, ஆக. 8-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு, இந்தக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டு, ஆக. 22-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வந்த மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி சிறிது நேரத்திலேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். இதனால், மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனா்.
தொடா் கதையாகி வரும் அலுவலா்களின் மெத்தனப் போக்கு, மாமன்ற உறுப்பினா்களின் அலட்சியம் உள்ளிட்ட காரணங்களால் குறைதீா் கூட்டங்கள் அதன் நோக்கத்திலிருந்து விலகி திசைமாறிச் செல்வதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவித்தனா்.
ஆணையா் விளக்கம்:
இதுதொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையா் கே. ஜே. பிரவீன்குமாா் கூறியதாவது:
மாதந்தோறும் நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் தெரிவிக்கும் புகாா்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை நேரடியாக அந்தந்த வாா்டுக்கு சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். இதுதொடா்பான அறிக்கையை அன்றைய தினம் இரவு 7 மணிக்குள் கட்செவி அஞ்சலில் பதிவிடவும், முக்கியமான பிரச்னை எனில் நேரில் வந்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
மண்டல அலுவலகங்களில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்திலும், மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளும் போதும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்களுக்கு மேற்கண்ட நடைமுறையைப் பின்பற்றி உரிய தீா்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இனி வரும் காலங்களில் மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.