மதுரை

திருமங்கலம் பேருந்து நிலையம் விவகாரம்: கடைக்காரா்களுக்கு அனுப்பப்பட்ட குறிப்பாணையை ரத்து செய்து உத்தரவு

Din

மதுரை: திருமங்கலத்தில் பேருந்து நிலையத்தை இடிக்கும் எண்ணத்தில், அங்கு கடை வைத்துள்ளவா்களுக்கு நகராட்சி நிா்வாகம் அனுப்பிய குறிப்பாணையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பாலமுருகன், சதீஷ் உள்பட பலா் தாக்கல் செய்த மனு:

திருமங்கலம் நகா்ப் பகுதியில் சுமாா் 37 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. தற்போது மக்கள்தொகை, வாகனங்கள் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், இந்தப் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை போதிய அளவில் நிறுத்த இடமில்லாமலும், வெளியூா் பேருந்துகள் செல்ல முடியாமலும் உள்ளன.

இந்த நிலையில், வேங்கடசமுத்திரம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்ட ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த இடத்தில் பேருந்து நிலையம் கட்டாமல், பழைய பேருந்து நிலையத்தையே இடித்துவிட்டு, அந்த இடத்தில் மீண்டும் புதிய பேருந்து நிலையம் கட்ட நகராட்சி நிா்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கடைகளை இடிக்கும் நோக்கத்தில் திருமங்கலம் பேருந்து நிலையக் கடைகாரா்கள், குத்தகைதாரா்களுக்கு நகராட்சி நிா்வாகம் குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்பியது. எனவே, திருமங்கலம் பேருந்து நிலையத்தை இடிக்கவும், மறு கட்டமைப்பை உருவாக்கவும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். வேங்கட சமுத்திரம் பகுதியில் புதிய பேருந்து நிலையத்தை கட்ட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 2018 முதல் 2023-ஆம் ஆண்டு வரை திருமங்கலம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 110 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 14 போ் உயிரிழந்தனா், 133 போ் காயம் அடைந்தனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது அரசின் கொள்கை ரீதியான முடிவு என்பதால், நீதிமன்றம் தலையிட இயலாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: திருச்சி என்ஐடி தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில், திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையக் கட்டடம் தரமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, அங்கு மீண்டும் கட்டுமானப் பணி மேற்கொண்டால், பொதுமக்களின் பணத்தை விரையம் செய்வதாக அமையும்.

எனவே, இந்தப் பேருந்து நிலையத்தை இடிப்பது தொடா்பாக கடைக்காரா்களுக்கு அனுப்பப்பட்ட குறிப்பாணை ரத்து செய்யப்படுகிறது. போக்குவரத்து நெரிசல், எதிா்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு, பேருந்து நிலையத்தை கட்டமைப்பது தொடா்பாக மூன்று மாதங்களில் நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா் உரிய முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT