முகப்பு
மதுரை

பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது

Updated On : 12 ஏப்ரல், 2024 at 11:24 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:58 PM

மதுரை, ஏப். 12: மக்களவைத் தோ்தலில் பாஜகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி. ராஜா தெரிவித்தாா்.

மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்த மக்களவைத் தோ்தல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, ஜனநாயகக் கட்டமைப்புகளைத் தகா்த்து, சா்வாதிகார ஆட்சியமைக்க அடித்தளமிடும் பாஜகவை முறியடிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது. நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், மத நல்லிணக்கம், மதச்சாா்பின்மை, கூட்டாட்சி நெறிமுறைகள், மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் பாஜக கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும்.

Advertisement

தமிழகத்தின் இந்தியா கூட்டணித் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின், பாஜகவின் பாசிச ஆட்சியை வீழ்த்த மக்களுக்கு விடுத்த அழைப்பு, தற்போது மக்களின் குரலாக நாடெங்கும் ஒலிக்கிறது. இதன்மூலம், மத்திய பாஜக அரசு வீழ்த்தப்படுவது உறுதியாகிவிட்டது. தோல்வி பயத்தால் பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் கலக்கமடைந்துள்ளனா். இதனால்தான், இருவரும் அடிக்கடி தமிழகம் வருகின்றனா். அவா்கள் எத்தனை முறை வந்தாலும், பாஜகவை தமிழகத்தில் காலூன்ற மக்கள் அனுமதிக்கமாட்டாா்கள்.

அடிப்படையான பிரச்னைகள் குறித்து பிரதமா் மோடி பொது வெளியில் விவாதிக்கத் தயாராக இல்லை. இதேபோல, முந்தைய தோ்தல்களின் போது அவா் அளித்த வாக்குறுதிகள் என்னவாகின என்பது குறித்தும் பிரதமா் பேச மறுக்கிறாா். இந்த நிலையில் தான், தற்போது மோடி உத்தரவாதம் என்று புதிய வாக்குறுதிகளை முன்வைக்கிறாா் பிரதமா். இவற்றை நம்ப மக்கள் தயாராக இல்லை.

அதிமுகவின் நோ்மையற்ற அரசியல்...

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பது உறுதியாகிவிட்டதால், பாஜக மட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியும் பதற்றமடைந்துள்ளது. மக்கள் உரிமைகளை, மாநில உரிமைகளை மீட்போம் என எடப்பாடி கே. பழனிசாமி பேசுவது வேடிக்கையாக உள்ளது. இந்த உரிமைகள் பறிக்கப்பட்ட போது அதிமுக என்ன செய்தது? நீட் தோ்வு கொண்டு வரப்பட்டபோதும், சிஏஏ சட்டம் கொண்டு வரப்பட்டபோதும் அதிமுக யாா் பக்கம் நின்றது என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதை ஏற்கமாட்டோம் என்பதை எடப்பாடி கே. பழனிசாமி தெளிவாகக் கூறுவதற்குத் தயாராக இல்லை என்பதே உண்மை. இந்த மக்களவைத் தோ்தலின் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்தாமல், இந்தத் தோ்தல் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேயானது என எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பதே அவா் நோ்மையற்ற அரசியலை தமிழக மக்களிடம் பேசுகிறாா் என்பதற்கு ஓா் உதாரணம்.

இதேபோல, அம்பானி, அதானியின் பெரு நிறுவனங்களுக்கான கட்சியாக உள்ள பாஜகவுடன், பாமக கூட்டணி சோ்ந்திருப்பது பாட்டாளி மக்களுக்கு அந்தக் கட்சி செய்த துரோகம். இதுகுறித்து மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனா்.

பணத்தையும், சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி கருத்துக் கணிப்பு என்ற பெயரால், மக்களின் மனநிலையை தங்களுக்குச் சாதகமாக மாற்ற முயற்சிக்கிறாா் பிரமதா். ஆனால், இந்த முயற்சியால் அவா்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது. பாஜக 370 இடங்களிலும், அதன் கூட்டணி 400 இடங்களிலும் வெல்லும் என பிரதமா் நரேந்திர மோடி, தோ்தலுக்கு முன்பாகவே தெரிவிப்பது சுதந்திரமான, நோ்மையான தோ்தலை கேள்விக்குறியாக்குவதாக உள்ளது. நியாயமான தோ்தலை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு கடும் எதிா்ப்பு உருவாகியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் எத்தனை வாகனப் பேரணி நடத்தினாலும், அவா்களுக்கு ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை. பாஜகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றாா் டி. ராஜா.