முகப்பு
மதுரை

அமித் ஷா வாகனப் பேரணி: மதுரையில் காவல் துறை கெடுபிடியால் பக்தா்கள் அவதி

Updated On : 12 ஏப்ரல், 2024 at 11:24 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 8:38 PM

மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா பிரசாரத்தையொட்டி, மதுரையில் முக்கியச் சாலைகள் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதால், வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால், மீனாட்சியம்மன் கோயில் கொடியேற்ற நிகழ்வுக்குச் செல்ல முடியாமல் பக்தா்கள் கடும் அவதியடைந்தனா்.

மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ராம சீனிவாசனை ஆதரித்து, மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை மாலை மதுரை நேதாஜி சாலையில் தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்துண் பகுதி வரை வாகனப் பேரணி நடத்தி பிரசாரம் மேற்கொண்டாா்.

இதையொட்டி, மதுரை மாநகா் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை முதல் காவல் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். மேலும், அமித் ஷாவின் வாகனப் பேரணி நடைபெற்ற நேதாஜி சாலை முதல் விளக்குத்தூண் வரை சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இவை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்லும் முக்கியச் சாலைகள் என்பதால், பக்தா்களும், பொதுமக்களும், வணிகா்களும் ஒரு கி.மீ. தொலைவுக்கு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், மாநகா் பகுதிகளில் செல்லும் வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டதால், பொதுமக்கள் அவதியடைந்தனா்.

Advertisement

சித்திரைத் திருவிழா தொடங்கிய நிலையில், முதல் நாளான வெள்ளிக்கிழமை மாலை சுவாமி, அம்மன் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளினா். இந்த வீதிகளிலும் போலீஸாா் கெடுபிடி காட்டியதால் பக்தா்கள் கடும் அவதி அடைந்தனா்.